• Monday, 07 October 2024

'தி லெஜண்ட்’ விமர்சனம்

'தி லெஜண்ட்’ விமர்சனம்

என்னதான் பண்ணியிருக்காரேன்னுதான் பார்த்திடுவோம் என்று ஆவலோடு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கே திகட்ட திகட்ட எதிர்பார்ப்போடு  தியேட்டருக்கு போன ரசிக மகா ஜனங்களை இரண்டரை மணி நேரம் வச்சி செஞ்சி அனுப்பியிருக்கும் அண்ணாச்சி படம் இது.

பத்து பதினைந்து ரஜினி படம், நாலஞ்சு எம்ஜிஆர் படம், ரெண்டு மூணு விஜய் படம் என பார்த்து சலித்த ஃபார்முலா கதையை பட்டி பார்த்து டிங்கரிங் தட்டி அண்ணாச்சி சரவணனின் கோடிகளை பதம் பார்த்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜெடி – ஜெர்ரி. அப்படி என்னதாம்பா கதைன்னு ஆர்வமா கேட்குறீங்களா?..

மருத்து ஆய்வில் புரட்சி செய்த விஞ்ஞானி சரவணனுக்கு உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் அழைப்பு வர, எம்புட்டு கொடுத்தாலும் வரமாட்டேன் என் சேவை என் மக்களுக்கே என கும்பிட்டு கேட்டுக்கிட்டு சொந்த கிராமத்துக்கு வர்றாரு சரவணன். வந்த இடத்தில் ஒரு பொண்ணோட காதலாகி கல்யாணமாகிறது. இந்த நேரத்தில் சர்க்கரை வியாதியில் உயிர் நண்பன் ரோபோ சங்கர் செத்துப்போக, சர்க்கரை வியாதியை அழித்தே தீருவேன் என்ற லட்சியத்துடன் ஒரு மருந்தும் கண்டுபிடிக்கிறார். மருத்துவ மாஃபியா கும்பலுக்கு இது தெரியவர, சரவணனை போட்டுத்தள்ள பார்க்கிறார்கள். சதிகளை முறியடித்து சரவணன் சாதிப்பதே கதை.

அண்ணாச்சி வஞ்சகம் பார்க்காம செலவு செஞ்சதில படத்தில பிரமாண்டம் தெரியுதே தவிர கதையில், காட்சி அமைப்புகளில் பிரமாதம்னு சொல்லிக்கிற மாதிரி எதுவுமில்ல. ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் புண்ணியத்தில் பாட்டு, ஃபைட்டெல்லாம் நல்லாதான் பண்றார் சரவணன். ஆனா அழும் காட்சியிலோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலோ ’என்ன கொடும சரவணன்’….

கீர்த்திகா, ஊர்மிளா என்று இரண்டு நாயகிகள். இதில் ஊர்மிளா வில்லியா மாறுவது என்ற டிவிஸ்டெல்லாம் போங்கு ஆட்டம் டைரக்டர்ஸ் சார்.. நாயகனின் தந்தையாக விஜயகுமார், அண்ணனாக பிரபு, வில்லன் சுமன், விஞ்ஞானி நாசர் என பல கேரக்டர்கள் பழைய டெம்பிளேட்டை பிடித்துக்கொண்டே தொங்குவது சுவாரஷ்ய குறைவு.

படத்தில் நிறைய இடங்களில் விவேக் வருகிறார். அவர் மறைந்துவிட்டதால் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் வாய்ஸையே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏதோ குகைக்குள் இருந்து பேசுவதுபோல் இருக்கிறது.

“சரவணா துளசிய காலேஜில விட்டுடுப்பா”ன்னு சொல்லும் பாட்டி சொல்லை கேட்டு துளசியுடன்(கீர்த்திகா) காலேஜுக்கு கிளம்ப, கட் பண்ணி ஓபன் பண்ணா கார் காலேஜுக்கு போகாம கோயில் சீன்ல போய் நிக்குது. 50 கோடிக்கு மேல அண்ணாச்சி செலவு பண்ணியிருக்காரு அதுக்காகவாது மெனக்கெடிருக்கலாமே  மிஸ்டர்ஸ் ஜேடி -ஜெர்ரி?

சும்மா சொல்லக்கூடாது இந்த உலகம் என்ன பேசும் ஊர் என்ன சொல்லும் என்றெல்லாம் யோசிக்காமல் நடித்திருக்கும் சரவணனின் நம்பிக்கைக்கு தாராள பாராட்டு. சூப்பர் அண்ணாச்சி.

எனக்கு என் மக்கள்தான் முக்கியம் அவர்கள் நண்மைதான் முக்கியம் என்று பக்கம் பக்கமாக வசனம் பேசும் சரவணன், உண்மையிலேயே அவருடைய தொழிலார்களை நல்லா வச்சிருக்காரா என்ற கேள்வி வரும்போது ‘அங்காடி தெரு’ படம் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

மூணு கோடிக்கு மேல சம்பளம் வாங்கிக்கொண்டு ‘ஜிமிக்கி கம்மல்’, ‘தில்லானா தில்லானா’ மெட்டையெல்லாம் சுட்டு சுட்டு பாட்டு போட்டிருக்கிறார்  ஹா..ஹா.. ஹா.. ஹாரிஸ் ஜெயராஜ். வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கு வெல்டன். நூற்றுக்கணக்கான கதைகளை எழுதி பெரிய ரசிக பட்டாளத்தை வைத்திருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருப்பதை நம்பமுடியவில்லை. கத்துக்குட்டி எழுத்தாளரே இதுக்கு போதுமே?....

’தி லெஜண்ட்’ ஏகப்பட்ட கரன்சிகளை செலவழித்து நெய்த கந்தல் ஆடை.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!