• Friday, 20 September 2024
‘நான் மிருகமாய் மாற’  ஆக்‌ஷனில் பயமுறுத்தும்

‘நான் மிருகமாய் மாற’ ஆக்‌ஷனில் பயமுறுத்தும்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவா இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் மிருகமாய் மாற'. நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் குழுவினர்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் உரையாடத் தொடங்கினர்.

நிகழ்ச்சியில்  படத்தின் ஒலிப் பொறியாளர் KNACK ஸ்டுடியோஸ் உதயகுமார் பேசுகையில்,

“இப்படம் ஒலியை சார்ந்து எடுக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.  தொடக்கத்தில், சசிகுமார் எவ்வாறு இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்ற சந்தேகம் இருந்தது. எனினும் அவர், ஒரு ஒலிப்பொறியாளரின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் வெளிக்காட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். படத்திற்கு கூடுதல் பலமாக ஜிப்ரானின் பின்னணி இசை அமைந்துள்ளது”என்றார்.

இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது:-

“இயக்குனர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார். இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் சொன்னதுபோலவே இசை அமைத்துக் கொடுத்தேன். நானும் சசிகுமாரும்  ‘குட்டி புலி’ திரைப்படத்திற்கு பின் இந்தப்படத்தில் இணைந்துள்ளேன்.”
 

இயக்குனர் சத்ய சிவா பேசியதாவது:-
“இப்படத்தில் புதிதாக  சிலவற்றை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.  படமாக நீங்கள் அதனை பார்க்கும் பொழுது, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படத்தில் ஒரு வடிவம் இருக்கும். ஆரம்பத்தில், அதனை நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில்  சிறிது சிரமம் இருந்த போதிலும், படம் தற்பொழுது உருவாகியுள்ள விதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்த போதிலும் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் கதையை தொலைபேசியின் வாயிலாக கொரோனா காலத்தில் சசிகுமாருக்கு சொன்னபோது,  “வித்தியாசமாக இருக்கிறது நிச்சயம் நான் நடிக்கிறேன்” என்று உடனே சம்மதித்தார். தனக்குள் இருக்கும் இயக்குனரை மறந்து ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் அவர் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
 

இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவர் பின்னணி இசையமைப்பதில் கை தேர்ந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே !  இத்திரைப்படத்திலும் அதனை நிரூபித்துள்ளார் ஜிப்ரான். ஒளிப்பதிவாளர் ராஜாவை பாராட்டி தான் ஆக வேண்டும். படத்தின் முக்கால்வாசி காட்சிகள்  இரவு  நேரத்தில் அல்லது மழையில் படமாக்கப்பட்டது. முடியாது என முகம் சுளிக்காமல் முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் அவர் பணி புரிந்தார். நாயகி ஹரிப்ரியாவிடம் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் சற்றும் தயங்காமல் கதையின் ஆழம் மற்றும் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனே சம்மதித்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் நாயகி என்பதனை தாண்டி, சசிகுமாரின் மனைவியாக மட்டுமே நம் கண்களுக்கு தெரிவார்.

பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நான் எதிர்பார்த்தவற்றை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பின் விக்ராந்த், சரத்,  ‘அம்பானி’ சங்கரை பார்த்தால் நிச்சயம் ஒரு விதமான பயம் ஏற்படும். சசிகுமார் மீது சிவப்பு சாயம்  ஊற்றுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு! அது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒரே நாளில் காட்சி அமைக்கலாம் என திட்டம் தீட்டினோம். எட்டு முதல் பத்து நாட்கள் வரை இதற்காக ரிகர்சல் செய்தோம். இப்படி உருவானதே அந்த சண்டை காட்சி.” என்றார்.

நாயகி ஹரிப்ரியா பேசுகையில், “
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010ல் வல்லக்கோட்டை திரைப்படம் நடித்தேன். அதன்பின் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளேன். மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான் இயக்குனர் சத்திய சிவா, எனது கன்னட திரைப்படமான பெல் பாட்டம் படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார். கதை மிகவும் பிடித்து போக உடன் சம்மதித்தேன். இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.   ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். ”என்றார்.

இறுதியாக  சசிகுமார் பேசியதாவது:-
 

“காமன் மேன் என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு   ‘நான் மிருகமாய் மாற’ என்று மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது. பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதிதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர். படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு" என்று தன் பாணியில் பேசி முடித்தார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!