• Monday, 07 October 2024

’சீதா ராமம்’ விமர்சனம்

’சீதா ராமம்’ விமர்சனம்

உருகி வழிய வைத்து உயிரை வருடிவிடும் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. காதல் ரசம் சொட்ட சொட்ட அந்த மாயையை நிகழ்த்துகிறது ‘சீதா ராமம்’.

கதை என்ன?..

பெயர் மட்டுமே எழுதப்பட்ட முகவரியற்ற ஒரு கடிதம். அதை உரியவரிடம் சேர்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் ராஷ்மிகா.  சீதா லட்சுமி என்ற அந்த நபரை தேடிச் செல்லும்போது சீதாலட்சுமி  என்பவர் இந்திய இராணுவத்தில் லெப்டினென்டாக இருந்த ராம்   என்பவரை காதலித்த கதையும், இருவரது தியாகமும் தெரியவருகிறது. அப்புறமென்ன தேசப்பற்றும் காதலும் கைகோர்த்த ஒரு கதை இல்லை இல்லை ஒரு காவியம் கண்முன் விரிந்து படம் பார்ப்பவர்களின் இதயத்தை ஏதேதோ செய்கிறது.

படம் எப்படி?..

ஆரம்பத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சினை, இந்து முஸ்லீம் கலவரம் என கதையின் முதல் புள்ளி தொடங்கும்போதே  வழக்கமான இந்தியா -பாகிஸ்தானை சிண்டு முடித்த ஒரு படமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் போரூற்றி எழுத்தப்பட்ட புதுமையான திரக்கதை என தெரியவந்ததும் வைத்த கண் வாங்காமல் திரையை கவனிக்க வைக்கும் கம்பீர திரைக்கதை நம்மை கதாபாத்திரங்கள் காட்சியமைப்புகளோடு ஒன்ற வைக்கிறது.

கதாபாத்திரங்கள்..

சமீபத்திய பேட்டி ஒன்றில் ”இனி காதல் கதை படங்களில் நடித்தது போதும் என்று நினைக்கிறேன்..” என துல்கர் சல்மான் சொல்லியிருந்தார். தயவு செய்து அப்படியொரு முடிவை எடுக்காதீர்கள் துல்கர். குறிப்பாக காதல் கதை என்றால் உங்களிடம் ஆகச்சிறந்த நடிப்பை பார்க்கமுடிகிறது. அதிலும் ’சீதா ராமம்’ படத்தில் உங்களின் துள்ளலான நடிப்பும் மெய்யாக நீங்கள் காதல் வயப்பட்டு உருகுவதும் உருக வைப்பதுமாக மிக நேர்த்தியான நடிப்பை படம் பார்ப்பவர்களின் மனதுக்கு கடத்தும் மந்திரம் எத்தனை அற்புதம்.

முகவரியற்ற நாயகியின் மொட்டை கடிதங்களின் கவிதைகளில் மூழ்கி முக்குளித்து அதை எழுதிய சீதா லட்சுமியின் (மிர்ணாள் தாக்கூர்) முகம் காண ஏங்குவதும் அவளை கண்டடைந்தும் புதிதாய் உயிர்த்தெழுந்தது போல் சிலிர்த்தெழுவதும், “இனி நான் அனாதை இல்லையே..” என்று மிர்ணாளை கட்டியணைத்து நெகிழ்வது, ஏமாற்றம், தனிமை, தவிப்பு, உயிர் போகும் தருவாயிலும் நேர்மை தவறாதது என பல காட்சிகளில் துல்கர் தூள் கிளப்புகிறார்.

காதலனின் அரவணைப்பும், அருகாமையுமே சிம்மாசனமாக எண்ணி துல்கரை தேடி வரும் மிர்ணாள், நீ இல்லையென்றால் இறக்கவும் சம்மதம் என்பதுபோல் தண்ணீருக்குள் துல்கருடன் மூழ்கி உடன்கட்டை ஏற உடன்படும் காட்சியில் கலங்காத கண்களே இருக்க முடியாது. துல்கரின் காதலை மனதில் சுமந்துகொண்டு அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் தவிப்பில் நூலில் சிக்குண்ட ஒரு பட்டாம் பூச்சி போல கண்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது ஆகபெரும் நடிகையாக மிர்ணாள் மிளிர்கிறார்.

ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக சீதா லட்சுமியை தேடி அலையும் ராஷ்மிகா  ராம் – சீதாவின் உண்மை காதலை உணர்ந்ததும் உடைந்து போய் உருகுவது, குற்ற உணர்வில் தவிப்பது என தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். பிரிகேடியராக விஷ்ணு ஷர்மாவாக வரும் சுமந்த் குமார், மேஜராக வரும் கெளதம் மேனன் என படத்தில் பல  கேரக்டர்கள் பிரமாதம். துல்கரின் பால்ய கால நண்பனாக வரும் காமெடியன் நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

60, 80களின் காலக் கட்டத்தை கண்முன் நிறுத்தும் கலை இயக்குனர் மிக சிரத்தை எடுத்துக்கொண்டு நுட்பம் காட்டியிருக்கிறார். பி.எஸ். வினோத் – ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, விஷால் சந்திரசேகரின் இசை, மதன்கார்க்கியின் பாடல் – வசனம் எல்லாமே படத்திற்கு ஆக பெரும் பலம்.

“உனது அழுகுரல் என்னைச் சுற்றி இருக்கும் அமைதியை கிழித்துக்கொண்டு கேட்கிறது” என்று துல்கர் எழுதும் கடித வரிகள் படத்தின் வசனம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு துளி சான்று.

தேசப்பற்றையும் காதலையும் கலந்து இப்படியொரு திரைக்கதை செய்வது என்பது சிகரம் ஏறி தேனெடுப்பது மாதிரி. அதை அவ்வளவு அழுத்தமாக அழகாக பதிவு செய்திருக்கும் இயக்குனர் ஹனு ராகவபுடி ஆகச்சிறந்த இயக்குனராக அடையாளப்படுகிறார்.

‘சீதா ராமம்’ காலம் கடந்தும் நிற்கக்கூடிய காதல் காவியம்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!