• Sunday, 27 November 2022

’கேஜிஎஃப் 2’ – திரை விமர்சனம்

’கேஜிஎஃப் 2’ – திரை விமர்சனம்

 

‘கேஜிஎஃப் 2’ – திரை விமர்சனம்

 

‘பாகுபலி 1’ க்ளைமாக்ஸில் கட்டப்பா ஏன் பாகுபலியை குத்தினார் என்ற கேள்வி, பார்ட் 2 பார்க்க எவ்வளவு எதிர்பார்ப்பை தூண்டியதோ அதைவிட நூறு மடங்கு ஆவலை தூண்டிய படம்தான் ‘கேஜிஎஃப் 2’.

கேஜிஎஃப் தங்கச் சுரங்கத்தின் தலைவனாக இருந்த கருடனை கொன்றுவிட்டு கேஜிஎஃபை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ராக்கிபாய், மக்கள் ஆதரவுடன் கேஜிஎஃபை தனி சாம்ராஜ்யமாக்கி ஆண்டு வர, பழைய எதிரிகளும், இந்திய அரசும் அவனுக்கு முடிவுகட்ட திட்டம் போடுகிறது. எமனையே ஏப்பம்விடும் அளவுக்கு பலம்கொண்ட ராக்கிபாய், தன்னையும் தனது சாம்ராஜ்யத்தையும் காத்துக்கொள்கிறானா இல்லையா என்பதற்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்.

முதல் பாகம் வெளிவந்தபிறகு பான் இந்தியா ஹீரோவாகிவிட்ட யாஷ் இரண்டாம் பாகத்திலும் செம மாஸ் காட்டி பாஸ் ஆகியிருக்கிறார். கண்ணுக்கு முன்னாடி நூறு பேர் வந்தாலும் இவரால் மட்டும் கொத்துகறி போடமுடியும் என்று லாஜிக்கையும் தாண்டி நம்பவைக்கும் அளவுக்கான உடல்வாகும் உடல்மொழியும் யாஷை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அமரவைக்கிறது. ராபின்ஹூட் பாணியில் இருக்கிறவர்களிடமிருந்து பறித்து ஏழைகளை இன்புற வைக்கும் கேரக்டர் என்பதால் வில்லத்தனம் ஹீரோயிசம் இரண்டிலுமே அப்படிபோடு என நரம்பு புடைக்க வைக்கிறது யாஷின் நடிப்பு.

”சாகும்போது பெரிய பணக்காரனாதான் சாகணும்” என்று சத்தியம் வாங்கிட்டு செத்துப்போகும் ஏழைத் தாயின் கனவை நிறைவேற்றினாலும் சம்பாதித்த தனது சாம்ராஜ்யத்தை பார்க்க தாய் இல்லையே என்ற எக்கத்தையும் இறுக்கத்தையும் கண்கள் வழி வெளிப்படுத்துவதும், காதல் மனைவி கொலை செய்யப்படும்போது முதல்முறையாக கண்ணீர்விடுவதும் யாஷ் எமோஷனிலும் மனதை தொடுகிறார்.

ராக்கிபாய் கதை முடிந்தது என்று நினைக்கையில் பீனிக்ஸாக எழுந்துவருவதும் எதிரிகளை பதுங்கி பாய்வதுமாக ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு அன்லிமிட் விருந்து படைக்கிறார் யாஷ்.

யாஷை தவிர படத்தில் மேலும் மூன்று ஹீரோக்கள் உண்டு. கேஜிஎஃப் என்ற கற்பனை உலகத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் இயக்குனர் பிரஷாந்த் நீல்,  ஃபீல்டுக்கு ஏற்றவாறு லைட்டிங் கொடுத்து பிரமாத ஒளிப்பதிவு செய்திருக்கும் புவன் கவுடா, தங்க சாம்ராஜ்யத்தை தத்ரூபமாக வடிவமைத்த ஆர்ட் டைரக்டர் ஆகிய மூவரும்தான் அந்த ஹீரோக்கள்.

இறந்துவிட்டதாக நினைக்கப்பட்டு திடீரென கேஜிஎஃப் சாம்ராஜியத்துக்கு சிம்மசொப்பனமாக வந்து நிற்கும் ஆதிரா கதாபாத்திரத்தில் வரும் சஞ்சய்தத்தின் தோற்றமே மிரட்டுகிறது. ராக்கிபாய்க்கு முடிவுகட்ட துடிக்கும் பிரதமமந்திரியாக ரவீணாடன்டன் செம தில் நடிப்பு.

முதல் பார்ட்டில் திமிர்பிடித்த பெண்ணாக வரும் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, பெண்களை மதிக்கும் அன்பு மனம் கொண்டவன்தான் ராக்கி என்று தெரிந்ததும் அவனிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சி லவ்லி.

விறுவிறு என்று நகரும் கதை இரண்டாம் பாதியில் ஏனோ இழுவையாக இருக்கிறது. சஞ்சய்தத் தவிர படத்தில் இன்னொரு வில்லனாக கொடுமை படுத்துகிறார் இசையமைப்பாளர். கல்குவாரி வெடிகுண்டை காதுக்குள்ள வச்ச மாதிரி  பின்னணி இசை பெரும் எரிச்சல்.

மின்சாரம் துண்டிக்கப்படும் ஒரு காட்சியில் காதல் மனைவி ஸ்ரீநிதி காற்று வாங்குவதற்காக யாஷ் ஹெலிகாப்டரையே பறக்கவிடுவது பிரமாண்ட ரசனை.  பாராளுமன்றத்துக்குள் அநாயசமாக நுழைந்து அசால்டா கொலை செய்யும் காட்சியெல்லாம் தாங்கலடா சாமி. விதவிதமாய் துப்பாக்கிகள், ரகம் ரகமாய்  கத்திகள் என்று படத்தில் ஆயிரக்கான தலைகள் பலியாவது, கொடூர வயலன்ஸ் இவையெல்லாம் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சட்டை முழுவதும் ரத்த கறை படிந்தது போன்ற உணர்வை தருகிறது.

சில குறைகள் இருந்தாலும் ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு ‘கேஜிஎஃப்’ செம தீனி.   

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!