• Tuesday, 14 May 2024
20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பலே பலே..

20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பலே பலே..

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 57 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்து கொடுத்தபோதும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும், ரிஸ்வானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் மளமளவென ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் வகுத்த யூகங்கள் அனைத்தையும் அசால்டாக தகர்த்தனர். இதன்மூலம் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் அசாம் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

 
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 முறையும், 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 முறையும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி கண்டு இருந்தது. உலக கோப்பை போட்டியில் தங்களுக்கு எதிரான இந்திய அணியின் நீண்ட கால ஆதிக்கத்துக்கு நேற்று பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது.
 
இந்தநிலையில், பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. பாகிஸ்தான் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துவீச்சில் மிக சிறப்பான துவக்கம் அவர்களுக்கு கிடைத்தது, வெறும் 20 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழப்பது நல்ல துவக்கம் கிடையாது. நாங்கள் பந்துவீசும் போது விரைவாக விக்கெட் வீழ்த்தவே நினைத்தோம். 
 
ஆனால் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு ஒரு சான்ஸ் கூட கொடுக்கவில்லை, பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டனர். துவக்கத்தில் ஆடுகளம் சற்று மந்தமாக இருந்ததால் பேட்டிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது, ஆனால் 10 ஓவர்களுக்கு பிறகு ஆடுகளத்தின் தன்மை சற்று மாறியதால் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்துவிட வேண்டும் என நினைத்தோம். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களை கட்டுப்படுத்திவிட்டனர். இது இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதே முக்கியம். உலகக்கோப்பை போட்டியில் இது ஆரம்பம் தான், முடிவு அல்ல” என்று விராட் கோலி தெரிவித்தார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!