• Monday, 07 October 2024
என்னய்யா உங்க ஆட்டம்?  கோலி மீது கபில்தேவ் காட்டம்

என்னய்யா உங்க ஆட்டம்? கோலி மீது கபில்தேவ் காட்டம்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றது. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.

முதல் 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் இன்று நமீபியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட்கோலி பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

20 உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறாததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி தொடங்கு வதற்கு முன்பு இந்தியா தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த தோல்விக்கு விராட்கோலி தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐ.பி.எல். போட்டிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனால் நாம் என்ன சொல்ல முடியும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இப்போதே திட்டமிட வேண்டும். எதிர்கால இந்திய அணி மிகவும் முக்கியமானது. ஐ.பி.எல்.க்கும் உலக கோப்பைக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்திருக்க வேண்டும்.

உலக கோப்பையில் இந்திய வீரர்களால் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தவில்லை.

வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் நாடு அதற்குபிறகுதான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் வீரர்கள் இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.

இவ்வாறு கபில்தேவ் கூறி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) விராட்கோலி கேப்டனாக உள்ளார். 20 ஓவர் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு உலக கோப்பைக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி தெரிவித்து இருந்தார். 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் கூறி இருந்தார்.

20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுகிறார். ரோகித் சர்மா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் லோகேஷ் ராகுலும் இதற்கான போட்டியில் உள்ளார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!