• Tuesday, 19 March 2024
ஷேன் வார்னே: ஜெயித்த கதை

ஷேன் வார்னே: ஜெயித்த கதை

 
ச.ந. கண்ணன்
 
எல்லோருக்கும் சிறப்பான தொடக்கம் அமைவதில்லை. ஷேன் வார்னேவும் இதற்கு விதிவிலக்கல்ல.
1992-ல் சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆனார் ஷேன் வார்னே. ஆனால் அது மோசமான அனுபவமாக அமைந்தது. ரவி சாஸ்திரி இரட்டைச் சதமெடுத்த அந்த ஆட்டத்தில் 1/150 என்றுதான் பந்துவீசினார் வார்னே. அடுத்த டெஸ்டிலும் விக்கெட் எடுக்காமல் 78 ரன்கள் கொடுத்தார்.
ஜனவரியில் அப்படிப் பந்துவிசிய வார்னேவுக்கு ஆகஸ்டில் இலங்கைக்கு எதிராக இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் கொடுத்து மீண்டும் விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் திணறினார் வார்னே. அதுவரை டெஸ்டில் 335 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார்.
மூன்று டெஸ்டுகளில் வாய்ப்பு கிடைத்தும் இப்படி ஆகிவிட்டதே என வார்னே கவலைப்படவில்லை. 2-வது இன்னிங்ஸில் தான் யார் என்பதை நிரூபித்தார். ஒருவேளை அதில் அப்படிப் பந்துவீசியிருக்கா விட்டால் வார்னேவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் கூட போயிருக்கலாம். இலங்கை அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. 150 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை இலங்கை நெருங்கியபோது வார்னேவின் அசாத்திய திறமையை முதல் அணியாகச் சந்தித்தது இலங்கை. கடைசி 3 விக்கெட்டுகளையும் 14 ரன்களுக்குள் வீழ்த்தி அட்டகாசமான வெற்றியை வழங்கினார் வார்னே. அவர் மீது முதலில் நம்பிக்கை வைத்தவர் ஆஸி. கேப்டன் ஆலன் பார்டர். நம்பிக்கை வீண்போகாமல் தொடர் வெற்றிகளை ஆஸ்திரேலியாவுக்கு அளித்தார் வார்னே.
1992-ல் தன்னுடைய முதல் பாக்ஸிங் டே டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 7 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை முதல்முதலாகப் பெற்றார். அதற்குப் பிறகு மொத்தமாக 17 ஆட்ட நாயகன் விருதுகளை டெஸ்டில் பெறும் அளவுக்கு மகத்தான வீரராக மாறினார்.
அடுத்த வருடமே, நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசி ஒரே வருடத்தில் பிரபலமானார் வார்னே. ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு ஆஸி. கிரிக்கெட் வீரரின் கனவு. அந்த ஆஷஸ் தொடரில் வீசிய முதல் பந்திலேயே மைக் கேட்டிங்கை நம்பமுடியாத விதத்தில் போல்ட் செய்தார் வார்னே. லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்து, ஆஃப் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது. அதுவே நூற்றாண்டின் சிறந்த பந்தாகக் கொண்டாடப்பட்டது. அந்த ஆஷஸ் தொடரில் 6 டெஸ்டுகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வார்னே. புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது என வார்னேவின் பந்துவீச்சைப் பார்த்த அனைவருமே உணர்ந்தார்கள்.
கிரிக்கெட்டுக்கு வெளியே பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளார் வார்னே. அதன் முதல் அத்தியாயமாக 1995-ல் சூதாட்டக்காரர்களுக்கு ஆட்டத்தைப் பற்றி தகவல் அளித்ததற்காக மார்க் வாஹ், ஷேன் வார்னே ஆகிய இருவருக்கும் அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதையும் ஊடகங்களே கண்டுபிடித்து மூன்று வருடங்கள் கழித்து விஷயத்தை வெளியே கொண்டு வந்தன.
டெஸ்ட் கிரிக்கெட்டில் லெக் ஸ்பின் பந்துவீச்சிலும் சாதிக்க முடியும், ஏராளமான விக்கெட்டுகளை அள்ள முடியும் என்கிற நம்பிக்கையை இளைஞர்களிடம் விதைத்தவர் வார்னே. அதிலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் வார்னேவின் தாக்கம் இல்லாத சுழற்பந்து வீச்சாளரே இல்லை எனலாம்.
1993 முதல் அடுத்த 5 வருடங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் செல்லுமிடமெல்லாம் வெற்றிகளைச் சேர்த்தார் வார்னே. எகானமி - 2-க்கும் குறைவு, சராசரி - 20-க்கும் குறைவு என ஒரு மகத்தான பந்துவீச்சை வெளிப்படுத்தி தன்னிகரற்ற சுழற்பந்து வீச்சாளராக விளங்கினார். இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு டெஸ்டுக்கும் கிட்டத்தட்ட 5 விக்கெட்டுகளை எடுக்கும் அளவுக்கு விக்கெட்டுகளை வாரிக் குவித்தார். தான் எப்போது பந்துவீசினாலும் விக்கெட் விழும் என்கிற நம்பிக்கையை ரசிகர்களிடமும் அச்சத்தை எதிரணி வீரர்களிடமும் உருவாக்கினார் வார்னே.
1995-ல் சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்டுகளில் விளையாடினார் வார்னே. இதில் ஒரு டெஸ்டில் அவர் பந்துவீசவேயில்லை. எனினும் அந்த டெஸ்ட் தொடரில் 19 விக்கெட்டுகளை எடுத்தார். சராசரி - 10.42. வேறெந்த தொடரிலும் வார்னேவுக்கு இந்த எண்கள் கிட்டவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்துவீச்சில் இந்தளவுக்குத் திணறுவார்களா என கிரிக்கெட் உலகம் ஆச்சர்யமாகப் பார்த்தது. (ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு எதிராக 15 டெஸ்டுகளில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.)
1996, 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்களை இப்போது பார்த்தாலும் புல்லரிக்கும். 1996 அரையிறுதியில் கைவசம் 6 விக்கெட்டுகள் வைத்திருந்த மே.இ. தீவுகள் அணியின் வெற்றிக்கு 30 ரன்களே தேவை. வார்னே இருக்கும்போது இது சாத்தியமாகி விடுமா? கடைசியில் கடகடவென விக்கெட்டுகளை எடுத்து 4/36 எனச் சிறப்பான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணிக்கு 5 ரன்கள் வித்தியாசத்தில் நம்பமுடியாத வெற்றியை வழங்கினார். மே.இ. தீவுகள் அணியின் சறுக்கல் இங்கிருந்து தொடங்கியது என்றுகூடச் சொல்லலாம்.
விளையாட்டில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை 1998 முதல் 2001 வரை உணர்ந்தார் வார்னே. தோள்பட்டையில் ஏற்பட்ட காயமும் சச்சின் டெண்டுல்கர் உள்பட இந்திய பேட்டர்கள் வார்னேவின் சுழற்பந்து வீச்சை அற்புதமாகக் கையாண்டதும் அவருக்குப் பின்னடைவாக அமைந்தன. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 9 டெஸ்டுகளும் அவருக்குப் புதிய பாடத்தைத் தந்தன. தன்னையும் ஓர் அணியால் வெளுத்து வாங்க முடியும் என்பதை இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது உணர்ந்தார். தான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம், கற்றுக்கொள்ள வேண்டிய திறமைகள் ஏராளம் என அவர் மனமாற்றம் அடைய இத்தொடர்கள் முக்கியக் காரணங்களாக அமைந்தன. இந்தியாவுக்கு எதிராக விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களிலும் அவருடைய சராசரி 40-க்கும் மேல் தான் இருந்தது. இந்தியாவை மட்டும் வார்னேவால் கடைசிவரை வெல்லவே முடியவில்லை. மற்ற அணிகளுக்கு எதிராக அவருடைய சராசரி 30-க்குக் கீழ் இருந்தால் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 47.18 என இருந்தது. அந்தளவுக்குச் சொல்லிச் சொல்லி வார்னேவின் பந்துவீச்சை அட்டகாசமாக விளையாடினார்கள் இந்திய பேட்டர்கள். அது ஒரு மகத்தான காலம் இந்திய ரசிகர்களுக்கு.
1996-ல் விரலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட வார்னே, 1998 மே மாதம் தோள்பட்டைக் காயத்துக்காக இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இனிமேல் விளையாடுவது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இதனால் ஜனவரி 1996-ல் டெஸ்டில் விளையாடிய வார்னேவால், அதே வருடம் நவம்பர் மாதம் தான் மீண்டும் விளையாட முடிந்தது. அதேபோல 1998-ல் மார்ச் வரை விளையாடினார். அடுத்த வருடம் ஜனவரியில் தான் மீண்டும் விளையாட வந்தார். இவையிரண்டும் பெரிய இடைவெளி இல்லை தான். ஆனால் ஒருவகையில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறு சறுக்கல் ஏற்பட்ட இக்காயங்களும் ஒரு காரணமாக அமைந்துவிட்டன.
1999 உலகக் கோப்பை என்றாலே வார்னேவின் பெயரும் ஞாபகத்துக்கு வரும். போட்டியின் ஆரம்பத்தில் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தாத வார்னே, ஆஸி. அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக ஆனார். அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4/29 என அபாரமாகப் பந்துவீசி ஆட்டத்தை டை செய்த வார்னே, இறுதிச்சுற்றில் 4/33 என இன்னொரு அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரு முக்கியமான ஆட்டங்களிலும் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். அந்த உலகக் கோப்பைப் போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விளையாட ஆரம்பித்து 10 வருடங்கள் கூட ஆகாத நிலையில் விஸ்டன் ஊடகத்தால் நூற்றாண்டின் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வார்னே தேர்வானார். ஐவரில் இவர் மட்டுமே நடப்பு வீரர். பிராட்மேன், சோபர்ஸ், ஜேக் ஹோப்ஸ், ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இதரச் சாதனையாளர்கள். 2000-ம் வருடம் டென்னிஸ் லில்லீயின் 355 விக்கெட்டுகளைக் கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆஸி. வீரர் என்கிற உயரத்தைத் தொட்டார்.
2001-க்குப் பிறகு பழைய வார்னேவைப் பார்க்க முடிந்தது. இன்னும் சொல்லப் போனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஐந்தரை வருடங்களில் மேலும் பல சிறப்புகளைப் பெற்றார் வார்னே. அக்காலகட்டத்தில் ஒரு டெஸ்டுக்கு 6 விக்கெட்டுகள் என்கிற ரீதியில் உலகெங்கும் அசத்தினார். 9 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார்.
2003 உலகக் கோப்பை தொடங்கும் முன்பு ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஊக்கமருந்தை உட்கொண்டதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஒரு வருடம் தடை செய்யப்பட்டார் வார்னே. எடை குறைப்புக்காக பயன்படுத்திய மருந்தினால் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாக வார்னே தெரிவித்தார். இத்துடன் வார்னேவின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எனினும் வார்னே இல்லாமலேயே ஆஸி. அணி 2003 உலகக் கோப்பையை வென்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் வார்னே ஆடியதில்லை. பாண்டிங், ஸ்டீஸ் வாஹ், கில்கிறிஸ்ட் எல்லாம் 280 ஒருநாள் ஆட்டங்களுக்கும் அதிகமாக விளையாடியவர்கள். ஆனால் வார்னே, 194 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். அதிலேயே 293 விக்கெட்டுகளை எடுத்தார். எகானமி - 4.25. இரு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியதில் எகானமி - 3.83 மட்டுமே. அந்தளவுக்கு எதிரணி வீரர்கள் வார்னேவின் பந்துவீச்சை ஜாக்கிரதை உணர்வுடன் எதிர்கொண்டார்கள்.
2004-ல் புதியதொரு மனிதனாக மீண்டு வந்து இன்னொருமுறை தன்னை நிரூபித்தார் வார்னே. இலங்கையில் விளையாடிய 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா 3-0 என வென்றது. 26 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் வார்னே. அந்தத் தொடரில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்கிற சாதனையை நிகழ்த்தினார். அதே வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அத்தொடரில் முரளிதரனைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்தார் வார்னே.
2005 ஆஷஸ் தொடரை யாரால் மறக்க முடியும்? ஷேன் வார்னே சுழலில் ஆண்ட்ரூ ஸ்டிராஸை வீழ்த்திய பந்து, 21-ம் நூற்றாண்டின் சிறந்த பந்து எனப் பெயர் பெற்றது. இப்படி வார்னேவால் மட்டுமே நூற்றாண்டுக்கான சிறந்த பந்தை வீச முடிந்தது. அத்தொடரில் 5 டெஸ்டுகளில் 40 விக்கெட்டுகளை எடுத்து கிரிக்கெட் உலகை மிரட்டினார். அதே தொடரில் 600 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற இன்னொரு சாதனையையும் படைத்தார். 2005-ல் மட்டும் 96 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தார் வார்னே. ஒரு வருடத்தில் வேறு யாரும் இத்தனை விக்கெட்டுகளை எடுத்ததில்லை. காயங்கள், அறுவைச் சிகிச்சை, ஓராண்டுத் தடை என கிரிக்கெட் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டபோதெல்லாம் மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தினார் வார்னே. அதற்கான சான்று, இந்தப் புள்ளிவிவரங்கள்.
1992-ல் 5 டெஸ்டுகளில் 12 விக்கெட்டுகள் எடுத்தார். 1993- 1998 பிப்ரவரி வரை 59 டெஸ்டுகளில் 291 விக்கெட்டுகள் எடுத்தார். 5 விக்கெட்டுகளை 13 முறையும் ஒரு டெஸ்டில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை 4 முறையும் எடுத்தார். இதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல 2001-க்குப் பிறகு இன்னும் சிறப்பாகப் பந்துவீசினார்.
நடுவில் சிறு சறுக்கல். 1998 மார்ச் முதல் 2001 ஜூன் வரை 23 டெஸ்டுகளில் 73 விக்கெட்டுகளே எடுத்தார். 23 டெஸ்டுகளில் இருமுறை மட்டுமே 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
2001க்குப் பிறகு தான் ஒரு ராஜா என மீண்டும் நிரூபித்தார். விக்கெட்டுகள் எடுக்கும் ஆர்வம், வெறியாக மாறிய காலகட்டம் என்று கூட வர்ணிக்கலாம். 58 டெஸ்டுகளில் 332 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதாவது 1993- 1998 காலகட்டத்தை விடவும் ஒரு டெஸ்ட் குறைவாக ஆடினாலும் 41 விக்கெட்டுகள் கூடுதலாக எடுத்தார். 5 விக்கெட்டுகளை 21 முறையும் ஒரு டெஸ்டில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை 6 முறையும் எடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் மைதானத்தில் பதிலடி தந்தார். இதனால் வார்னே பந்துவீச வந்தால் பேட்டர்கள் நடுங்கும் அளவுக்குப் பெரிய தாக்கத்தை உண்டாக்கினார்.
முக்கியமான கட்டங்களில் வார்னே சொதப்பியதே இல்லை எனலாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் மூச்சாக இருக்கும் ஆஷஸ் தொடரில் 36 டெஸ்டுகளில் 195 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆஷஸில் வேறு யாரும் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. இதற்கு அடுத்ததாக டென்னிஸ் லில்லீ 167 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். டெஸ்டின் 3-வது மற்றும் 4-வது இன்னிங்ஸில் வார்னேவின் பந்துவீச்சு சூறாவளியாக இருக்கும். 5 விக்கெட்டுகளை 37 முறை எடுத்துள்ளார். அதில் 3-வது மற்றும் 4-வது இன்னிங்ஸில் மட்டும் 19 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி ஒருவர் பந்துவீசினால் எதிரணியால் ஆஸ்திரேலிய அணியை எப்படி வெல்ல முடியும்? இதனால் தான் இக்காலகட்டத்தில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தது ஆஸ்திரேலிய அணி.
இரு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் வார்னேவின் பந்துவீச்சு இன்றி ஆஸ்திரேலியாவால் பெரிதாகச் சாதித்திருக்க முடியாது. இரு அரையிறுதி, ஒரு இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் வார்னே. இதற்கு மேல் ஒரு வீரரால் அணியின் வெற்றிக்கு எப்படிப் பங்களிக்க முடியும்? இரு அரையிறுதி ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி நெருக்கடியில் இருந்தபோது இருமுறை 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
2007-ல் இங்கிலாந்தை ஆஷஸில் 5-0 என வீழ்த்தி 2005 தோல்விக்குப் பழிவாங்கியது ஆஸ்திரேலியா. அத்தொடரில் 23 விக்கெட்டுகளை எடுத்து 708 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார் வார்னே. அப்போது வார்னே தான் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார்.
பேட்டிங்கிலும் தனது முத்திரையைப் பதிக்காமல் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 அரை சதங்களுடன் 3154 ரன்கள் எடுத்தார் வார்னே. 2001-ல் பெர்த்தில் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டார்.
திறமைகளைக் கண்டறிவதில் வல்லவரான வார்னேவால் ஆஸ்திரேலிய அணிக்குப் பெரிய அளவில் தலைமை தாங்க முடியாதது துரதிர்ஷ்டம் தான். ஆஸ்திரேலியாவுக்காக 11 ஒருநாள் ஆட்டங்களில் தலைமை தாங்கிய வார்னே, ஐபிஎல் போட்டியின் தொடக்க வருடத்தில் (2008) இளைஞர்களைக் கொண்ட ராஜஸ்தான் அணியை சாம்பியன் ஆக்கினார். ஓய்வுக்குப் பிறகு ஐபிஎல் அணிக்குத் தலைமை தாங்கி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. அந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தார்.
வார்னேவின் மறைவுக்கு ஆஸி. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். தமிழிலேயே ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. 90களில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு வார்னே பெரிய ஆதர்சமாக இருந்தார். அவரைப் போல பந்துவீசிப் பார்க்க யாருக்குத்தான் ஆர்வம் வந்ததில்லை! கிரிக்கெட்டுக்கு அவரால் இன்னும் என்னென்னவோ நல்ல விஷயங்கள் நடந்திருக்க வேண்டும். சமீபத்தில் கூட கிரிக்கெட் விதிமுறை குறித்த சச்சினின் ட்வீட்டுக்கு ஆர்வத்துடன் பதில் அளித்தார். நூறாண்டுக்கு ஒருமுறை தான் இப்படிப்பட்ட திறமைசாலிகள் தோன்றுவார்கள். திடீரென்று ஒருநாள் எல்லோரையும் தவிக்கவிட்டுச் சென்றுவிடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வார்னேவின் பந்துவீச்சையும் அவருடைய திறமைகளையும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.ந்
 
நன்றி : தினமணி - ச.ந.கண்ணன்

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!