• Saturday, 20 April 2024
விஜய்சேதுபதி - டாப்ஸி கலக்கும் ‘அனபெல்சேதுபதி’

விஜய்சேதுபதி - டாப்ஸி கலக்கும் ‘அனபெல்சேதுபதி’

விஜய் சேதுபதி டாப்ஸி, யோகிபாபு நடிக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் முழு படப்பிடிப்பையும் ஜெய்ப்பூரில்  நிறைவுசெய்த திருப்தியோடு பேசுகிறார் அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன். 
``உங்க முதல் படமே டாப்ஸி, விஜய்சேதுபதின்னு அசத்துறீங்களே..?’’

“நன்றிங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுதன் சார்தான் அதுக்கு காரணம். அவர்கிட்ட இந்தக் கதையோட ஒன்லைனைச் சொன்னதுமே பிடிச்சுப்போய், ‘பிடிங்க அட்வான்ஸ்’னு ஒரு தொகையைக் கையில் கொடுத்துட்டார். விஜய்சேதுபதி, டாப்ஸின்னு பெரிய நடிகர்களை மனசுல வச்சுதான் ஸ்கிரிப்டை ரெடி பண்ணினேன். இது இந்தியா முழுவதும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கதை என்பதால் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்துல பண்ணிக்கலாம், மத்த மொழிகள்ல டப்பிங் செய்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. நடிகர்கள்ல முதன்முதல்லா யோகிபாபு சார்கிட்டதான் இந்தக் கதையைச் சொன்னேன். அதன்பிறகு டாப்ஸி, விஜய்சேதுபதி சார்னு எல்லாருக்குமே இந்தக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது.

விஜய்சேதுபதி, டாப்ஸி, யோகிபாபு தவிர ராதிகா மேடம், ஜெகபதிபாபு, வெண்ணிலா கிஷோர், ராஜேந்திர பிரசாத், சேத்தன், தேவதர்ஷினி, சுரேகாவாணி, சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ்மேனன், சுனில்னு நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க. தொழில்நுட்பக் கலைஞர்கள் குழுவும் பக்காவா செட் ஆகிடுச்சு. பி.சி.ஸ்ரீராம் சார் பட்டறையில் இருந்து வந்த கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘விக்ரம் வேதா’ வினோத் கலை இயக்கம். பிரதீப்பின் எடிட்டிங்கும் பலம். இசையமைப் பாளரா கிஷோரை அறிமுகப்படுத்து றோம். நாலு பாடல்கள் வெரைட்டியா கொடுத்திருக்கார். முழுக்கவே ஜெய்ப்பூர்லதான் ஷூட் பண்ணினோம். ஒரு பாடலை ஹைதராபாத்தில் எடுத்தோம்.’’

``விஜய்சேதுபதியோட கெட்டப் எல்லாம் செம மாஸா இருக்கே..?’’

“அண்ணன் இதுல மன்னன் ஆச்சே! சேது அண்ணா ரொம்ப ஃப்ரெண்ட்லி. ஸ்வீட் ஹார்ட். செட்ல அவர் என்ட்ரி ஆனாலே லைட்மேன்ல இருந்து சக நடிகர்கள் வரை அத்தனை பேர்கிட்டேயும் ஒரு ‘ஹாய்’ சொல்லி அந்த நாளை இனிதாக்குவார். அவருக்கு இந்தக் கதையில ரொம்ப ரொம்ப ஆர்வமிருந்தது. நடிகரா மட்டுமல்லாமல், 15 நாள்கள் என்னோடு உட்கார்ந்து ஸ்கிரிப்ட்டையும் செதுக்கிக் கொடுத்தார். அவர் வேற ஒரு படத்து ஷூட்ல இருந்தால்கூட திடீர்னு கூப்பிட்டு ‘ஒரு சீன் பேசியிருந்தோமே... அதை இப்படிப் பண்ணினா என்ன?’ன்னு புது ஐடியா சொல்வார். அதுல என்னோட கருத்துகளையும் ஏத்துக்குவார். இன்னொரு விஷயம். 1948 பீரியட் ஃப்ளாஷ்பேக் போர்ஷன்ல ராஜாவா வர்றார். அதிலும் டாப்ஸி இருப்பாங்க.’’

மன்னர் விஜய்சேதுபதி... காமெடி டாப்ஸி - ‘அனபெல் சேதுபதி’ சீக்ரெட்
 

``சமீபகாலங்களாக இந்திய சினிமா கவனிக்கும் டாப்ஸிக்கு என்ன ரோல்?’’

‘`டீசர் வெளியாகற வரை வெயிட் பண்ணுங்க. டாப்ஸி மேம் ரொம்பவே புரொஃபசனல். அதே சமயம் சென்ஸிபிளானவர். அவங்களுக்குத் தமிழ் தெரியாது. ஆனா, நாம பேசினா புரிஞ்சுப்பாங்க. இந்தியிலும் சரி, மத்த மொழிகள்லேயும் சரி... அவங்க தேர்தெடுக்கற கதைகள் அத்தனையுமே சமூக அக்கறை கொண்ட நல்ல கதைகளாக இருக்கும். மூணு முறை கதையைக் கேட்டாங்க. அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவங்க இதுல காமெடி ரோல் பண்றாங்க. டாப்ஸியும் யோகிபாபுவும் காம்பினேஷன் வந்தாலே சிரிப்பு அள்ளும். விஜய்சேதுபதி நடிக்கறார்னதும், ‘அவரோடு நடிக்கறதுக்கு ரொம்பவும் ஆர்வமா இருக்கேன்’னு சொல்லிட்டே இருந்தாங்க. தமிழ்ல அவங்க ரெகுலரா படங்கள் பண்ணலைனாலும்கூட, தமிழ் சினிமாக்கள் பற்றி அப்டேட்டா இருக்காங்க.’’

``முதல் படத்திலேயே பெரிய நட்சத்திரக் கூட்டத்தை எப்படி சமாளிக்க முடிஞ்சது?’’

“இந்தப் படத்தோட எடிட்டிங் வேலைகள் மும்பையில போயிட்டிருக்கு. நான் ஷூட் பண்ணும்போது அப்ப எனக்கு எதுவுமே ஆச்சர்யமாத் தெரியல. எடிட்ல உட்காரும் போதுதான், ஒரே ஃபிரேம்ல 17 பேர் நடிக்கிற காட்சியை எல்லாம் எப்படிப் படமாக்கினேன்னு எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. ஆனா, இதெல்லாம் எங்க குரு ஏ.எல்.விஜய் சார்கிட்ட கத்துக்கிட்ட விஷயம். ‘தாண்டவம்’, ‘சைவம்’, ‘தலைவா’ன்னு மூணு படம் ஒர்க் பண்ணியிருக்கேன். அதுல ‘சைவம்’ல பெரிய கூட்டம் இருக்கு. அங்கே எடுத்த பயிற்சி இப்ப கைகொடுத்திருக்கு. இத்தனை பேரை நான் ஹேண்டில் பண்ணியிருக்கேன்னு சொல்றதைவிட, அவங்க எல்லாரும் என்னை ஹேண்டில் பண்ணியிருக்காங்கன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.’’

உங்க அப்பா, இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். எவர்கிரீன் ஹிட் படங்கள் கொடுத்தவர். அவர் எந்த அளவுக்கு உங்களுக்கு இன்ஸ்பிரேஷன்?’’


“நான் சின்ன வயசா இருக்கும்போது அப்பா பிஸியான இயக்குநர். அந்தச் சூழலிலும்கூட எங்ககிட்ட நிறைய கதைகள், அனுபவங்கள் பகிர்ந்துப்பார். ஆனாலும் எனக்கு அப்போ சினிமா ஆசை வரலை. நான் லயோலாவில் விஸ்காம் படிக்கும்போதுதான் எனக்கு சினிமா ஆசை தொடங்குச்சு. வீட்ல அப்பாகிட்ட சொன்னேன். ‘நீ என்னவாகணும்னு நினைக்கிறீயோ அதைப் பண்ணு’ன்னு கிரீன் சிக்னல் கொடுத்தார். ஒரே ஒரு அட்வைஸ்தான் அப்பா கொடுத்தார். ‘சினிமால இறங்கினா, முழுமையா இறங்கிடணும்’ என்பதுதான் அது.

 
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!