• Friday, 26 April 2024
நாளை கார்த்திகை தீபத் திருவிழா

நாளை கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல நேற்று மதியம் 1 மணியில் இருந்து வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.

மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைகாண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி உச்சிக்கு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக மகா தீபத்தன்றும், அந்த சமயத்தில் வரும் பவுர்ணமியன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நாளை (19-ந் தேதி) மதியம் 2.51 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதனால் வருகிற 20-ந் தேதி வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!