• Thursday, 25 April 2024
ஐயப்பனின் அறுபடை வீடுகள்

ஐயப்பனின் அறுபடை வீடுகள்

சபரிமலை செல்பவர்கள், ஐயப்பன் குடிகொண்டுள்ள மேலும் சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.

சபரிமலையில் தர்மசாஸ்தாவான ஐயப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, பக்தர்கள் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலிக்கிறார். சபரிமலை செல்பவர்கள், ஐயப்பன் குடிகொண்டுள்ள மேலும் சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட அழைக்கிறார்கள்.

எருமேலி:- ஐயப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். (கோவில் கேரளாவில் உள்ளது)

ஆரியங்காவு:- ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன்

அரசராக காட்சித் தருகிறார் ஐயப்பன். (தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் உள்ளது.)

அச்சன்கோவில்:- வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக் காட்சித் தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். (செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.)

பந்தளம்:- இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப்பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்குதான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன. மகரவிளக்கின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும்.

குளத்துப்புழா:-இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறிய அளவிலேயே கட்டப்பட்டு உள்ளது. (செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது.)

சபரிமலை:-ஐயப்பனை மணந்து கொள்ள விரும்பிய மகிஷி மாளிகப்புரத்து அம்மனாக சபரிமலையில் ஐயப்பனின் இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தன்னை மணிகண்டன் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்ற பூரண நம்பிக்கையில், அவள் இன்றும் காத்திருப்பதாக நம்பப்படுகிறது

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!