• Monday, 18 August 2025
ஜெய்பீம் விமர்சனம்

ஜெய்பீம் விமர்சனம்

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள சினிமா 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்தப் படம் தற்போது பொதுசமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சினிமா பொதுசமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது.

இந்த சினிமா குறித்து பார்ப்பதற்கு முன் அந்த உண்மைச் சம்பவம் குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்வோம். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரியவந்தது.

இருளர் - பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர்நீதிமன்றத்தை அடைந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் 'ஜெய் பீம்'. ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார்.

சூர்யா, பிரகாஷ்ராஜ், கே.மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் இந்தக் கதையை தாங்கி நடித்திருக்கின்றனர். செஞ்சி பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் ராஜாக்கண்ணு தன் மனைவி செங்கேணியுடன் வசித்து வருகிறார். வேட்டை சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலியான ராஜாக்கண்ணு உள்ளூர் முக்கியஸ்தர் வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்கக் போகிறார். அதன் தொடர் நிகழ்வாக அந்த வீட்டில் இருந்த நகைகள் திருடு போகவே சந்தேகமானது ராஜாக்கண்ணு மீது திரும்புகிறது. காவல்துறை அவரை கைது செய்து குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி அடித்து கொடுமை செய்கின்றனர்; அதில் அவர் இறந்து போகிறார். ஆனால், காவல்துறை அவர் லாக்கப்பில் இருந்து தப்பிவிட்டதாக ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தகவல் சொல்கிறது. நீளும் சிக்கலில் செங்கேணி வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். பிறகு வழங்கப்பட்ட நீதியை நோக்கி நகர்கிறது வலிமிகுந்த திரைக்கதை.

படத்தின் துவக்கக் காட்சியே வெகுஜனங்களுக்கு அறிமுகமில்லத பக்கத்தைப் புரட்டுகிறது. காவல்துறையின் அயோக்கியத்தனத்தை முதல்காட்சியிலேயே இயக்குநர் தோலுரித்துக் காட்டுகிறார். படத்தின் கதைக்கரு ஆழமானது. திரைக்கதையிலும் வசனத்திலும் சற்றும் சுனக்கம் காட்டாமல் இந்தக் கதை மக்களுக்கு உறுதியாக நல்லமுறையில் போய் சேர வேண்டும் என உழைத்திருக்கிறது படக்குழு. காவல்நிலையத்தில் காவலர்கள், ராஜாக்கண்ணு உள்ளிட்ட மூவரை அடித்து துன்புறுத்துகிறார்கள். வலி தாளாமல் ராஜாக்கண்ணுவுடன் இருப்பவர் சொல்கிறார் "அண்ணே வலி தாங்க முடியலணே, பேசாம திருடுனோம்னு ஒத்துக்கிருவோம்ணே...!", அதற்கு ராஜாக்கண்ணுவின் பதில்: "தம்பி இந்த வலி காயம் ஒரு நாள் ஆறிப் போயிரும், ஆனா திருட்டுப்பட்டம் சாகுறவர கூட வரும். கொஞ்சம் பொறுத்துக்கடா..." - இந்தக் காட்சியில் எழுந்துநின்று கைதட்டத் தோன்றுகிறது.

ஒரு நடிகராக மணிகண்டன் மிகச் சிறப்பாக பாத்திரத்தின் அடர்த்தியை உணர்ந்து நடித்திருக்கிறார். லிஜோ மோல் ஜோஸ் சின்னச் சின்ன முகபாவங்களின் இயலாமையினையும், மன உறுதியினையும் அற்புதமாக காட்டி அசத்தியிருக்கிறார். உண்மையில் 1993-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மணிகண்டனும், லிஜோ மோல் ஜோஜூம் மீண்டும் நம்முன் உயிர்ப்புடன் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். இயக்குநர் இந்தக் கதைக்கு வெளியேயும் சில முக்கிய விஷயங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார் அல்லது நினைவுபடுத்துகிறார். பழங்குடியின மக்கள் தங்களுக்கான சாதிச் சான்றிதழைப் பெறக் கூட எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

Comment / Reply From