• Thursday, 02 May 2024
சிவனுக்கான திருவீடு

சிவனுக்கான திருவீடு

சிவபெருமானை எழுந்தருளச் செய்ய கோபுரங்களும், விமானங்களும், மாடங்களும் கொண்ட மாபெரும் கோயில்களோ அல்லது பூஜா மண்டபங்களோ அத்தியாவசியமா என்ன? அவனை என்றும் இருத்தி வழிபடுவதற்கு உரிய உன்னதமான திருவீடு எது? மகான்களும் அருளாளர்களும் தெளிவாகவே அதைக் கூறுகிறார்கள்.

1)

உள்ளவர் சிவாலயம் செய்வார்
நானென்ன செய்வேன் ஏழை ஐயா
என் காலே கம்பம் தேகமே கோயில்
சிரமே பொன்னின் கலசமையா
கூடலசங்கம தேவா கேளையா
நிற்பவைகளுக்கு அழிவுண்டு
நடப்பவைகளுக்கு அழிவில்லை.

– பசவண்ணர்

(2)

முடியினில் கங்கை தண்ணிலவு
கரத்திலும் தாளிலும் மெல்லுடல் அரவங்கள்
இடப்பாகத்தில் கருணையின் ஈரம் ததும்பும் இமயமலைமகள்
உடலெங்கும் சந்தனம்
இவ்வளவு கடுங்ககுளிரைத் தாங்கும் சக்தி
உமக்கு எப்படிக் கிடைக்கும்
கனகசபாநாதரே
நிராசையில் கொதிக்கும் என் மனதில்
நித்தியவாசம் செய்ய
உம்மால் ஆகாது எனில்?

– அப்பைய தீஷிதர் (ஆத்மார்ப்பண ஸ்துதி)

(3)

நீர் இங்குமங்கும் போகவேண்டாம் மலைவாசியே
என்னிடத்திலேயே வாசம் செய்யும்.
ஓ ஆதிவேடனே
என் மனக்கானகத்தின் எல்லைக்குள்ளேயே
மோகம் பொறாமை எனப்
பல கர்வம் பிடித்த மிருகங்களுண்டு.
அவற்றைக் கொன்று
உம் வேட்டை விநோதங்களில் பிரியமாக மகிழ்ந்திரும்.

– ஆதிசங்கரர், சிவானந்தலஹரி 43

(4)

ஊக்கமெனும் தூணில் நிலைத்ததும்
உறுதியான குணங்களெனும் கயிறுகள் கட்டியதும்
உடன் எடுத்துச்செல்லும்படியானதும்
வண்ணமயமாக தாமரைகளால் அழகுற்றதும்
நாள்தோறும் நல்வழியை நாடுவதும்
குற்றமற்றதும்
ஒளிவீசும் துணிபோர்த்தியதுமான
என் மனக் கூடாரத்தில்
மன்மதனின் பகைவனே
உன் கணங்கள் சேவிக்க
சக்தியுடன் வந்தடைந்திடுக
நிறைந்தோனே தலைவனே
வெல்க.

– ஆதிசங்கரர், சிவானந்தலஹரி 68

மேற்கூறிய இரண்டு பாடல்களில், இரண்டு எதிரெதிரான மனப்பாங்குகளை ஆசாரியார் கூறியிருக்கிறார். விலங்குகளைப் போன்ற குணங்களைக் கொண்டு ஆசையும் மோகமும் புதர்போல மண்டிய கானகம் போன்ற மனமானாலும் சரி, உறுதியும் சிரத்தையும் பக்தியும் கொண்ட தூய்மையான சாத்வீக மனமானாலும் சரி, திடமாக பக்தி செய்தால் இரண்டிலும் ஈசன் எழுந்தருள்வான் என்பது இதன் மூலம் உணரப்படுகிறது.

(4)

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

– திருமூலர், திருமந்திரம் 7.11.1

(காளா – கதிர்வீசுகின்ற. கலா என்பது களா என்றாகிக் காளா என நீண்டது).

தெளிந்த ஞானிகளுக்கு அவர்களது இதயமே சிவலிங்கம் எழுந்தருளியிருக்கும் கருவறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே சிவலிங்கத்தின் நேர்நோக்கு வாயிலாயும், உயிரே சிவலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.

(5)

சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும்
என் சிந்தையுள்ளும்
உறைவான், உயர்மதிற் கூடலின் ஆய்ந்த
ஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கு என்கொலாம்
புகுந்து எய்தியதே.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!