• Friday, 03 May 2024
அஜித் சுட்ட 6 பதக்கங்கள்

அஜித் சுட்ட 6 பதக்கங்கள்

 

நடிகர் என்ற புகழை தாண்டி  கார், பைக் ரேஸர், சமையல் கலைஞன், துப்பாக்கி சுடும் வீரன், பைலட் என பல துறைகளில்  ‘வலிமை’ மிக்கவர் அஜித். அண்மையில் சென்னையில் நடந்த 46வது தமிழ் நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அஜித் ஆறு பதக்கங்களை வென்று சாதித்துள்ளார்.  இதற்காக கடந்த சில மாதங்களாகவே அஜித் ஸ்பெஷலாகத் தயாராகி வந்தாராம். இதுபற்றிய மேலும் சுவாரசியத் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் சென்னை ரைபிள்ஸ் கிளப் எக்ஸிக்யூடிவ் கமிட்டி மெம்பரான பாலாஜி தயாளன்.

“தமிழ்நாடு முழுக்க இருக்குற ரைபிள்ஸ் கிளப்கள், தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியனுக்குக் கீழ வரும். அதுல எங்க சென்னை ரைபிள்ஸ் கிளப்ல அஜித், நெப்போலியன், சரத்குமார், சூர்யா, கார்த்தின்னு பல சினிமா நட்சத்திரங்களும் அரசியல்வாதிகளும் மெம்பரா இருக்காங்க. பொதுவா ரைபிள் கிளப்ல சேர்ந்த கொஞ்ச நாள் எல்லாரும் ஆக்டிவ்வா இருப்பாங்க. போகப் போக ஆர்வம் குறைஞ்சு பயிற்சி எடுக்குறதை நிறுத்திடுவாங்க. ஆனா, அஜித் சார் எங்க கிளப்ல மெம்பரா ஆன 2016 முதல் இப்போ வரை கொஞ்சம்கூட ஆர்வம் குறையாம ஈடுபாட்டோட பயிற்சி எடுத்துட்டு வர்றார். பதக்கம் வெல்லணும்ங்கிறது மட்டும்தான் அவரோட குறிக்கோள். அதனால அவர் பயிற்சில இருக்குறப்போ துளியும் கவனச்சிதறல் இருக்காது. அவரைவிட வயசுல குறைஞ்சவங்க வந்து ஏதாவது டிப்ஸ் சொன்னாலும் எந்த ஈகோவும் இல்லாமக் கேட்டுப்பார். தன்னை ஒரு ஸ்டார்னு அவர் எங்கேயும் காட்டிக்காம இருந்ததாலயே எங்களுக்கும் அவரை நெருங்கின நண்பராத்தான் பார்க்கத் தோணுச்சு. தன்னால கூட்டம் சேர்ந்து அது மத்தவங்களுக்குத் தொந்தரவாகிடக்கூடாதுன்னு எப்பவுமே தனியாதான் வருவார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம பயிற்சியை முடிச்சுட்டுப் போய்டுவார்.

 

துப்பாக்கிச் சுடும் போட்டிகள்ல கலந்துக்க மூச்சுப்பயிற்சி ரொம்ப அவசியம். அப்போதான் துப்பாக்கியை உறுதியா பிடிச்சுச் சுடமுடியும். அதுதவிர்த்து இது முழுக்க முழுக்க மைண்ட் கேம்தான். மனசு தெளிவா இருந்தா மட்டும்தான் இலக்கை அலைபாயாம குறிபார்க்க முடியும். அஜித் சார் கவனம் செலுத்தின இரண்டு முக்கியமான விஷயங்கள் இவை.

மொத்தம் 850 போட்டியாளர்கள் தமிழகம் முழுக்க இருந்து கலந்துகிட்டாங்க. ரைபிள், பிஸ்டல்னு ரெண்டு பிரிவுகள்ல போட்டி நடந்தது. ஜூனியர்ஸ், சப் ஜூனியர்ஸ், யூத், சீனியர்ஸ், veteran-னு எல்லா வயதில இருக்குறவங்களும் கலந்துகிட்டாங்க. அஜித் சார் சீனியர்ஸ் பிரிவுல 25 மீட்டர் பிஸ்டல், ஃப்ரீ ஸ்டைல்னு ரெண்டு பிரிவுல கலந்துகிட்டார். இந்த கேட்டகிரில நிஜத் தோட்டாக்களைத்தான் பயன்படுத்துவோம். 10 மீட்டர் கேட்டகிரில மட்டும் பெல்லட் பயன்படுத்துவோம். 2018-ல இருந்தே அஜித் சார் இந்தப் போட்டிகள்ல கலந்துக்குறதால அவருக்குப் போதிய அனுபவம் இருந்தது. போக, ட்ரெயினர் கூடவும் நிறைய டிஸ்கஸ் பண்ணுனார். தொடர் பயிற்சி, அவரோட டெடிகேஷன் இது எல்லாம் சேர்ந்துதான் அவருக்குப் பதக்கங்களை அள்ளிக்கொடுத்திருக்கு’’ என உற்சாகமாய் முடிக்கிறார் பாலாஜி தயாளன்.

 

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!