• Wednesday, 20 August 2025
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தாமதமாகும் தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தாமதமாகும் தடுப்பூசி

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் இதுவரை 15 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 3 கட்டங்களாக தடுப்பூசிகள் போடும் பணி நடந்தது.

தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் 2 தவணைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டது. 2-வது தவணை தடுப்பூசி போடும் பணிகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2-வது தவணை தடுப்பூசி போடும் பணி மெல்ல நடந்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய அரசு மே 1-ந்தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட பிரிவினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும்பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. கடந்த 28-ந் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியது. இதனையடுத்து 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். நேற்று 2-வது நாளாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பணி நடைபெற்றது.

நேற்று இரவு 10.15 மணி வரை நாடுமுழுவதும் 96 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்தனர். இதன்மூலம் கடந்த 2 நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 2 கோடியே 30 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று 3-வது நாளாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

இதுவரை ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை எந்த தேதியில், எந்த மருத்துவமனையில் தடுப்பூசி போடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும் தகவல் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் முன்பதிவு மட்டுமே செய்யப்பட்ட நிலையில் நாளை தடுப்பூசி போடும் பணி தொடங்குமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.

தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாளை இந்த திட்டத்தை தொடங்க இயலாது என்று பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாளை (மே 1) தடுப்பூசி போடும் பணியை தொடங்க இயலாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளன.

இந்த 8 மாநிலங்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒரு வாரம் கழித்து தான் தொடங்க இயலும் என்று கூறி உள்ளன. சில மாநிலங்கள் தற்போதைக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இயலாது. அதற்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என்று கூறி உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறி உள்ளன.

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டு முடித்த பிறகே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தொடங்குவோம்” என்றார். எனவே ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க குறைந்த பட்சம் 4 மாதங்கள் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது.

கர்நாடகா உள்பட பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே நாளை திட்டமிட்டபடி தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடியுமா என்பதில் சிக்கல் நீடிக்கிறது. மராட்டிய மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லை என்பதால் தடுப்பூசி போடுவதை நிறுத்தி உள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். போதிய அளவுக்கு கையிருப்பு வைத்த பிறகுதான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்குவோம் என்று மராட்டிய மாநில அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை அறிவித்தபடி தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Comment / Reply From