• Monday, 18 August 2025

செவிலியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

செவிலியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஓமைக்ரான், கடந்த ஆண்டு இறுதியில்தான் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல்வரால் தொடங்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓமைக்ரான், மோசமான பாதிப்பினை ஏற்படுத்தாது என மருத்துவ ஆய்வாளர்கள் சொன்னாலும்கூட, அதனைப் பரவாமல் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓமைக்ரான் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா வைரஸ் பரவலும் பெரிய அளவில் இல்லை. இத்தொற்று தமிழகத்தில் 50-க்கும் கீழ்தான் உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனாவிற்கு உயிரிழப்புகள் எதுவுமில்லை.

நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு 4,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செவிலியர்கள் 4,448 பேரும், சுகாதாரப் பணியாளர்கள் 2,448 பேரும், என மொத்தம் 7,296 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை விட செவிலியர்களுக்கு கூடுதலாக 4,000 ரூபாயும், சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதலாக 3,000 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் மேலும் 4,000 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாகக் கூறப்பட்டிருந்தது. சொன்னபடி அதனை நிறைவேற்றவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்” என, தமிழக பா.ஜ.கவின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, ``பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா?” என, அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

 

Comment / Reply From