• Thursday, 02 May 2024
வேண்டாம் வேளாண் சட்டம் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

வேண்டாம் வேளாண் சட்டம் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லியில் விவசாய சங்கத்தினர் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க.வும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் விவசாயிகளை பாதிக்கும் இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பதவி ஏற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைவதால் இன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்க விவசாயிகள் போராட்டக்குழு அரைகூவல் விடுத்துள்ளது.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச் சட்டம்-2020”, “வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம்- 2020”, “அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் 6 மாத காலம் நிறைவு பெறுகிறது.

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உணர்வுகளை மதித்து அந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலை அளிப்பதாக இருக்கிறது.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், “இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்” என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!