• Sunday, 17 August 2025

முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் : பிரதமரை சந்திக்கிறார்

முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் : பிரதமரை சந்திக்கிறார்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இப்போது அரசாங்க பணிகளில் இணக்கமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கூறி இருந்தார். இந்த சூழலில் இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை காலை 11 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். 11.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார். அதன் பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். அப்போது தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.


Comment / Reply From