• Friday, 29 March 2024
விவசாயிகள் வயிற்றில் பால் : வேளாண் சட்டங்கள் வாபஸ்

விவசாயிகள் வயிற்றில் பால் : வேளாண் சட்டங்கள் வாபஸ்

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான், அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம்.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!