• Tuesday, 07 May 2024
வானதியிடம் வீழ்ந்த கமல் : தோல்விக்கு காரணம் என்ன?

வானதியிடம் வீழ்ந்த கமல் : தோல்விக்கு காரணம் என்ன?

அ.தி.மு.க கூட்டணியின் பலத்தில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் தன்னை எதிர்த்து போட்டியிடுவார் என்பது எதிர்பாராத ஒன்றுதான். தமிழகத்தில் ஓரளவு பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் கோவையும் ஒன்று. அதிலும் கோவை மேற்கு தொகுதியில் அக்கட்சிக்கு கொஞ்சம் கூடுதலாகவே வாக்கு வங்கி இருக்கிறது. இந்த தொகுதி முதலில் கோவை மேற்கு தொகுதியாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு மறுசீரமைப்புக்கு பிறகு கோவை தெற்கு தொகுதியாக மாற்றப்பட்டது.

இத்தொகுதி முழுக்க முழுக்க நகரப்பகுதி என்பதால் பலதரப்பட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். வடமாநிலத்தவர்களும் தொகுதி முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர். இதுவரை இந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அம்மன் அர்ச்சுனன் 59,788 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் 42,369 வாக்குகளும்பெற்றனர். இந்த முறை அ.தி.மு.க-வும் கூட்டணியில் இருப்பதால், அந்தக் கட்சிக்கான வாக்குகளும் கிடைக்கும் பட்சத்தில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப்போட்டது பாஜக.

அதனால்தான் இத்தொகுதியை அ.தி.மு.க-விடமிருந்து அக்கட்சி வலியுறுத்தி வாங்கியது. ஆனால், இந்த முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு இது மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. அவருக்கு கோவை வடக்கு தொகுதி கொடுக்கப்பட்டது. அர்ச்சுனனைப் போன்று அ.தி.மு.க-வில் வேறு சிலரும் இத்தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தொகுதி, பா.ஜ.க-வுக்குப் போனதில் அப்செட்டான அ.தி.மு.க-வினர், தலைமைக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால், தேர்தலில் அ.தி.மு.க-வினர் வானதிக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. போதாக்குறைக்கு அ.தி.மு.க வாக்குகளில் அ.ம.மு.க வேட்பாளரும் சேதாரத்தை ஏற்படுத்தினார். தனித்து வெற்றிபெறும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு வெல்ல முடியமா என்ற சந்தேகம் நிலவியது. கமல்ஹாசனுக்கு தொகுதி மக்களிடையே காணப்பட்ட வரவேற்பு, வானதிக்கு நெருக்கடியாகவே அமைந்தது.

இதற்கிடையில் இன்று கோவை தெற்கு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்ட போது, மயூரா ஜெயக்குமார் மற்றும் கமல்ஹாசன் இருவருக்கிடையே மட்டுமே போட்டி நிலவியது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு வானதி ஸ்ரீனிவாசன் முன்னிலை வகிக்கத் துவங்கினார். தொடர்ந்து பல சுற்றுகள் வாக்கு எண்ணப்பட்ட போதும் கமல் மற்றும் வானதி சீனிவாசனி இடையே இருவருக்கும் போட்டி நடந்து கொண்டே இருந்தது . ட்விட்டரில் ஹாஷ்டாக் போடும் அளவுக்கு இழுபறி நீடித்தது. இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தொகுதி தேர்வில் கமல் தவறு செய்ததே அவரது வீழ்ச்சிக்கு காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!