• Thursday, 25 April 2024
மேகதாது ஆய்வுக்குழு கலைப்பு

மேகதாது ஆய்வுக்குழு கலைப்பு

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதாக சில விவசாய சங்கங்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்ல தாமாக முன்வந்து விசாரித்து, மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுகிறதா என ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு மேகதாது பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய இருந்தது.
 
ஆனால், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தனியாக குழு அமைத்ததற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், இதுபற்றி அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டது. அப்போது, பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேகதாது ஆய்வுக்குழு தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது பகுதியில் எந்த அணை கட்டும் பணியையும் தொடங்கவில்லை என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் கோரி அளித்த விண்ணப்பம் இன்னும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது, அனுமதி கிடைத்ததும் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் கூறியது.
 
 
மேலும், மேகதாது பகுதிக்கு செல்லும் ஒரு சாலை பழுதடைந்துள்ளதால், அந்த சாலையை சீரமைப்பதற்காக கற்கள், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதை சிலர் திரித்து செய்தி வெளியிட்டதாகவும் கர்நாடகா கூறியது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகதாது பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உத்தரவிட்டது. அத்துடன், முறையான அனுமதியின்றி மேகதாது பகுதியில் எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது. 

Related Tags :

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!