• Thursday, 25 April 2024
முதல்வர் ஸ்டாலினின் முக்கிய 5 கையெழுத்துகள்

முதல்வர் ஸ்டாலினின் முக்கிய 5 கையெழுத்துகள்

இன்று காலை முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், கோபாலபுரம் இல்லம், அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், பெரியார் திடல் ஆகிய இடங்களுக்கு சென்று மரியாதை செய்தார். தொடர்ந்து ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் அறையில், தனது இருக்கையில் அமர்ந்த ஸ்டாலின், தனது முதல்வர் பணிகளை தொடங்கினார்.

1) முதல் கையெழுத்தாக, ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்குவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக இம்மாதமே ரூ. 2,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) தொடர்ந்து ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு செய்த உத்தரவில் கையெழுத்திட்டார். இது மே மாதம் 16 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

3) தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினை செயலாற்றும் வகையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகள், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.

4) மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களை முதல்வர் பெற்று அம்மனு மீது ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்கை நிறைவேற்றும் வகையில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்கி இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

5) கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி அவர்களின் நிதி சிக்கலை குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன்படி முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைக்கு அரசு வழங்கும்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!