• Monday, 18 August 2025
மீண்டும் முருங்கை மரம் ஏறும் பெட்ரோல் விலை

மீண்டும் முருங்கை மரம் ஏறும் பெட்ரோல் விலை

022 - 2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “கலவையான எரிபொருளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதால் கலவையில்லாத எரிபொருளுக்கு இந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 கலால் வரி விதிக்கப்படவுள்ளது” என்று அறிவித்தார். 
இதையடுத்து அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கலவையான எரிபொருள் விநியோகிக்கப்படாத பகுதிகளில் பெட்ரோல் விலையும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பெட்ரோல், டீசலுக்காக கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிக அளவில் சாா்ந்திருப்பதை குறைக்கவும், விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கவும் கரும்பு அல்லது உபரி உணவு தானியங்களில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலில் கலக்கப்படுகிறது. 
 
பொதுவாக 10 சதவீத எத்தனால், 90 சதவீத பெட்ரோலுடன்  கலக்கப்படுகிறது. நாட்டின் 75-80 சதவீத பகுதிகளில் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், தென் இந்தியாவில் உள்ள தொலைதூர பகுதிகள் மற்றும் ராஜஸ்தானில் சில பகுதிகளில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதிகளில் மட்டும் பெட்ரோல் விலை உயரும் என கருதப்படுகிறது.
 
அதே சமயம், உணவுசாரா எண்ணெய் வித்துகளிலிருந்து பிரித்தெடுக்கும் பயோடீசலை டீசலில் கலக்கும் நடவடிக்கைகள் சோதனை அளவில் தான் நடைபெற்று வருகிறது. 
 
இதனால் நாட்டில் பெரும்பாலும் கலவையில்லாத டீசல்தான் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் டீசலின் விலை அக்டோபர் 1 முதல் லிட்டருக்கு ரூ. 2 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Comment / Reply From