• Sunday, 27 November 2022
பிஜேபி ஆட்சியில் தவறு நடக்கல : குஷ்பு தடாலடி

பிஜேபி ஆட்சியில் தவறு நடக்கல : குஷ்பு தடாலடி

“தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னாடிதான் பா.ஜ.க-வில் சேர்ந்தீங்க. உடனே போட்டியிட வாய்ப்பு கொடுத்தாங்க. எதிர்பார்த்துப் போனீர்களா? அல்லது அவர்களாகவே கொடுத்தாங்களா?”

“எதிர்பார்த்துப் போயிருந்தால், எதுக்கு எம்.எல்.ஏ சீட் கேட்கணும், ராஜ்யசபா எம்.பி பதவியே கேட்டிருப்பேனே? டிசம்பர் மாதமே என்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணித் தொகுதியின் இன்சார்ஜாகப் போட்டாங்க. அப்போ அந்தத் தொகுதி யாருக்குன்னு எதுவுமே தெரியாது. கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்யணும்னு இறங்கி வேலை செய்தேன். நான் செய்த வேலைகளை எல்லாம் கட்சியில் பார்த்தாங்க. யாரை நிற்க வைக்கலாம்னு டெல்லியில் பேச்சு அடிபட்டபோது, ‘அந்தத் தொகுதியில் யாரை நிற்க வைக்கப்போறாங்கன்னு தெரியாதபோதே தனியாக அலுவலகம் போட்டு அவ்வளவு வேலைகள் பார்த்திருக்காங்க. அவர்களை நிற்க வைக்கலாம்’னு என் பேரை சிலர் சொல்லியிருக்காங்க. நான் போட்டியிடுவேன்னு எதிர்பார்க்கவில்லை. கட்சித்தலைமையே எனக்குக் கொடுத்த வாய்ப்புதான் இது.”

``சேப்பாக்கம் திருவல்லிக்கேணிக்குப் பதிலாக அந்த மூன்று மாதம் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வேலை செய்திருந்தால் வென்றிருப்பீர்களா?’’

``ஜெயிக்கணும்னு இருந்தால் எங்கு வேணாலும் ஜெயிக்கலாம். 10 வருடங்களாக அ.தி.மு.க இருந்துட்டாங்க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அஞ்சு வருஷத்துக்கு மேல ஒரு கட்சிக்கு வாய்ப்பு தர மாட்டாங்க. அதனால், தி.மு.க அலை இருந்தது எல்லாருக்குமே தெரியும். எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. எந்தத் தொகுதியாக இருந்தாலும் இறங்கி வேலை செய்யணும். ‘ஐயய்யோ, நாம ஜெயிப்போமா? தோற்றுவிட்டால் என்ன செய்வது? பேரு கெட்டுப்போய்விடும் என்றெல்லாம் யோசிக்கக்கூடாதுங்க.’’

“ரஜினி மாறலை... கமலைப் பாராட்டுகிறேன்!”
 

``தாமரை மலராதுன்னு சொன்னீங்க. அப்புறம் மலரும் என்று சொல்றீங்க. இந்தக் கருத்து மாற்றத்துக்கும், கட்சி மாற்றத்துக்கும் என்ன காரணம்?’’

``காங்கிரஸில் இருக்கும்போது நிகழ்ச்சிகளிலெல்லாம் கலந்துகொள்ளாமல் இருந்தேன். தி.மு.க-வில் இருந்தபோது கலைஞர் கற்றுக்கொடுத்த விஷயம்தான் சுயமரியாதை. மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக்கூடாது. எனக்குப் பேர் இருக்கு, புகழ் இருக்கு... ஒரு இடத்துக்குப் போனால் 10 பேர் வரத்தான் செய்வாங்க. அதைப் பார்த்து சுற்றி இருந்த தலைவர்களெல்லாம் பொறாமைப்பட்டால் என்ன செய்ய முடியும்? அவங்களைத் தாண்டி என்கிட்ட பேட்டி எடுக்கறாங்க, அவங்களைத் தாண்டி என்கிட்ட கூட்டம் வருது என்றால், அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. நான் காங்கிரஸை விட்டுப் போகப்போறேன்னு மூத்த தலைவர்களிடம் ஒரு வருடம் முன்னாடியே சொல்லிட்டேன் `வேண்டாம்... மாற்றங்கள் வரும்’னு சொன்னாங்க. எந்த மாற்றமும் நடக்கவில்லை. எங்கு என்னென்ன தவறுகள் நடக்குதுன்னு அவர்களுக்கே தெரியும். அப்பதான் எல்.முருகன் பேசினார். பா.ஜ.க ஆட்சியிலும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பெரிதாக எந்தத் தவறும் நடக்கவில்லை. மக்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கறாங்க. அதுதான் பா.ஜ.க-வில் சேர்ந்தேன்.’’

``பா.ஜ.க-வில் உங்களுக்கு பெரிதாக எந்தப் பொறுப்பும் கொடுக்கலையே..?”

``எம்.எல்.ஏ சீட் கொடுத்தது பெரிய பொறுப்பு இல்லையா? தேர்தல்ல சீட் கொடுத்ததால்தான் பா.ஜ.க-வுக்குப் போனாங்கன்னு ஒரு பக்கம் சொல்லுறாங்க. இப்போ எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லையேன்னு கேட்குறாங்க? அப்படின்னா என்ன அர்த்தம்... பேரம் பேசிட்டு உள்ளே வரலைன்னு அர்த்தம்.’’

“அண்மையில் ‘எட்டு ஆளுநர்களில் ஒருவர்கூட பெண் இல்லை’ என்று ட்விட்டரில் பதிவு போட்டீங்க. கட்சித் தலைமையிடமிருந்து என்ன பதில் உங்களுக்குக் கிடைத்தது?”

“எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்தந்த மாநிலங்களில் இத்தனை பெண்கள் ஆளுநராக இருக்காங்கன்னு பதில் சொன்னாங்க. புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் எட்டுப் பேரில் யாருமே பெண் இல்லை என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. அது நியாயமானது. அதை அப்படியே விட்டுட்டாங்க. எங்கள் கட்சியில் ஜனநாயகம் இருக்கு. காங்கிரஸில் அப்படி என்ன ஜனநாயகம் இருக்கிறது?”

``கோவைத் தெற்குத் தொகுதியில் உங்கள் கட்சியைச் சேர்ந்த வானதி ஜெயிச்சுட்டாங்க. உங்கள் நண்பர் கமல் தோற்றுவிட்டார். இதை `வெற்றிகரமான தோல்வி’ன்னு பார்க்கறீங்களா?”

``நட்பு வேறு, அரசியல் வேறு. ரெண்டையும் கலக்கக்கூடாது. நான் கமல் சாரை அரசியல் ரீதியாக விமர்சித்தது கிடையாது. இனி விமர்சிக்கவும் மாட்டேன். அந்தத் தொகுதியில் வானதி ஜெயிச்சதில் எனக்கு சந்தோஷம். கமல் சார் டஃப் பைட் கொடுத்திருக்கார். அவரைப் பாராட்டுகிறேன்.’’

“ ‘அண்ணாத்த’ படம் எப்படி வந்திருக்கு? ரஜினி என்ன சொன்னார்?”

“டப்பிங் எல்லாம் முடிச்சுட்டேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. 28 வருஷத்துக்குப் பிறகு ரஜினி சார் கூட வொர்க் பண்ணும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் மாறியிருப்பார், அவருக்குள் நிறைய மாற்றம் வந்திருக்கும்னு லொகேஷன் போனால், 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ இன்னமும் அப்படியேதான் இருக்கார். ஷாட் முடிந்ததும் அவர் கேரவனுக்குப் போறது கிடையாது. ஆரம்பத்துல நானும் மீனாவும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். அவரே எங்ககிட்ட வந்து, ‘என்னய்யா… என்னைத் தனியா விட்டுட்டீங்க, பேசக்கூடாதா என்கிட்ட’ன்னு கேட்டார். ‘உங்களைத் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு நினைச்சோம் சார்’னு சொன்னோம். பழைய கதைகள் எல்லாம் பேசினோம்.’’

“குஷ்பு வெளிப்படையாகப் பேசுவதைக் குறைத்துக்கொள்ளணும்’னு உங்கள் கணவர் சுந்தர்.சி ஆனந்த விகடன் பேட்டியில சொல்லியிருக்காரே?”

“என் நல்லதுக்காகதான் என் கணவர் அப்படிச் சொன்னார். நான் ஓப்பனாகப் பேசுவதால் என்னென்ன பிரச்னைகளைச் சந்தித்தேன்னு அவருக்கு நல்லாத் தெரியும். தொழில் ரீதியாக, சட்ட ரீதியாகன்னு எல்லாப் பிரச்னைகளிலும் நான் தனியாகச் சந்திக்கவில்லை. என்கூடவே அவர் இருந்திருக்கார். அதனால்தான் நான் வெளிப்படையாகப் பேசுவதைக் கொஞ்சம் குறைக்கணும்னு விரும்புகிறார். ஆனால், அப்படிப் பேசறதுதான் என் இயல்பு. என் இயல்பை மாற்றிக்கொண்டால் நான் நானாகவே இருக்கமாட்டேன். மனசுல ஒண்ணு வச்சுக்கிட்டு வெளியே ஒண்ணு பேசுவது எனக்குப் பிடிக்காது. அப்படி எனக்கு வரவும் வராது. அரசியலுக்கு வந்ததுக்குப் பிறகு கொஞ்சமாவது அரசியல்வாதியாக மாறுங்கன்னு என்கூட இருப்பவர்கள் சொல்லுறாங்க. ஆனால், என்னால மாற முடியலை.’’

“இப்படி ஓப்பனாகப் பேசுபவர்களை பா.ஜ.க விரும்புமா?”

“நான் இப்படித்தான் பேசுவேன். இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் பேசியிருக்கேன். இது தெரிந்துதானே பா.ஜ.க-வில் என்னைச் சேர்த்திருக்காங்க. அப்புறம் என்ன?’’

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!