• Friday, 26 April 2024
நேர்மையை வைத்துக்கொண்டு அரசியல் மாற்றத்தை உருவாக்குவது எளிதல்ல : சகாயம் ஐ.ஏ.எஸ். பேட்டி

நேர்மையை வைத்துக்கொண்டு அரசியல் மாற்றத்தை உருவாக்குவது எளிதல்ல : சகாயம் ஐ.ஏ.எஸ். பேட்டி

அரசியல் வேட்கை தீவிரமாக இருந்திருந்தால், நான் எப்போதோ முடிவெடுத்திருப்பேன். அரசியலுக்கு வருவது பற்றி நான் யோசித்ததில்லை. நான் விருப்ப ஓய்வு பெற்றதும்கூட அரசியலில் ஈடுபடுவதற்காக அல்ல’’ என்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். ‘மக்கள் நீதி மய்யத்தில் இணையப்போகிறார்’, ‘சீமானோடு சேரப்போகிறார்’ என்றெல்லாம் யூகங்கள் பரவிய நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, தன்னைப் பின்பற்றும் 20 இளைஞர்களை வேட்பாளர்களாகக் களத்தில் இறக்கியிருக்கிறார் சகாயம். அவருடன் ஒரு சந்திப்பு..

“ ‘மக்கள் பாதை’ அமைப்பில் என்னதான் பிரச்னை? அதிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டீர்களே?”

‘‘நான்தான் அந்த அமைப்பைத் தொடங்கினேன். அது ஓர் அறக்கட்டளை. ‘மக்கள் பாதை’ என்ற பெயரை வைத்தது, அதற்கான அடையாளச் சின்னத்தை உருவாக்கியது, செயல்திட்டங்களை வகுத்தது எல்லாமே நான்தான். இதன் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருப்பவரை அழைத்துவந்து அந்தப் பொறுப்பில் நியமித்ததும் நான்தான். என் கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் அமைப்புக்கு வந்தார்கள். நான் உருவாக்கிய அமைப்பிலிருந்தே என்னை நீக்கியதாகச் சொல்வது நகைப்புக்குரியது. இதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருக்கிறது. நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தபோதே, இந்தக் குழப்பம் தொடங்கியது. நான் பொதுவெளிக்கு வந்து நற்பெயர் பெற்றுவிடக்கூடாது என்று நினைக்கும் சில சக்திகள் இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கிறேன். இதற்காகப் பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல். விசாரித்துக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில் சட்ட நடவடிக்கைகள் எடுப்போம்.’’

அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் முடிவுக்கு வந்தது ஏன்?”

‘‘கோ-ஆப்டெக்ஸில் பணியாற்றியபோது, என் மேலாளர் ஒருவர் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு நகராட்சித் தலைவரால் தாக்கப்பட்டார். அவர்மீது காவல்துறையில் புகார் அளித்தும் கைது செய்யப்படவில்லை. தாக்கப்பட்டவரைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து சமரசம் பேசி அனுப்பிவிட்டார் அமைச்சர். இதுபற்றித் தலைமைச் செயலருக்கு விரிவாகக் கடிதம் எழுதினேன். அடுத்த சில நாள்களில் இந்திய மருத்துவத் துறைக்கு மாற்றப்பட்டேன். நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் என்னை ஏற்றுக்கொள்ளும் மனமில்லை. அடுத்த இரண்டு நாள்களில் அறிவியல் நகரத்துக்கு மாற்றினார்கள். அது எந்த அதிகாரமும் இல்லாத பணி. நெடுங்காலம் அங்கேயே வைத்திருந்தார்கள். ‘என்ன தவறு செய்தேன்? ஏன் அதிகாரமற்ற பணியில் வைத்திருக்கிறீர்கள்?’ என்று தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதினேன். பதில் இல்லை. இனிமேல் இந்தப் பணியில் ஒட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று தெரிந்தது.

2020 அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று விருப்ப ஓய்வு மனுவை அனுப்பினேன். ‘விதிமுறைக்குட்பட்டு டிசம்பர் 30 அல்லது காந்தி மறைந்த ஜனவரி 30-ல் விடுவியுங்கள்’ என்று கோரியிருந்தேன். ஒரு பதிலும் இல்லை. தலைமைச் செயலரைச் சந்திக்க வாய்ப்பு கேட்டேன், தரப்படவில்லை. ஜனவரி 2-ம் தேதியன்று விடுமுறையில் வீட்டில் இருந்தேன். அன்று அலைபேசியில் அழைத்து ‘உங்களை விடுவித்துவிட்டோம்’ என்றார்கள். முறைப்படி விடுவிக்கப்படாததால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்தடுத்த நாள்களில் அலுவலகம் சென்றேன். ‘ரஜினி கட்சியில் சேர்வதற்காக விருப்ப ஓய்வு கேட்டார். இப்போ ரஜினி கட்சி ஆரம்பிக்காம பின்வாங்கிட்டதால பணியிலிருந்து விலகாம இருக்கார்’ என்று ஊடகங்களில் செய்தி கசியவிட்டார்கள். அதுமட்டுமல்ல... என் இடத்துக்கு இன்னொரு அதிகாரியை நியமித்துவிட்டார்கள். என் உதவியாளரை அழைத்து, ‘இனிமேல் சகாயம் வீட்டுக்குக் காரை அனுப்பக்கூடாது. புதிய அதிகாரி வீட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவு போட்டார்கள். மிகுந்த மனவலியோடு வீட்டுக்கு வந்தேன். 30 ஆண்டுக்காலம் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளேன். இந்த வலியும் அவமானமும் இப்போதும் மனதில் தேங்கியிருக்கிறது. தலைமைச் செயலர் அலைபேசியில் அழைத்து, ‘வாழ்த்துகள் தம்பி...’ என்று இரண்டு வார்த்தைகள் சொல்லி மனநிறைவோடு அனுப்பியிருந்தால் கொஞ்சம் வலி குறைந்திருக்கும்.’’

“அரசியலில் ஈடுபடும் முடிவில் ஏன் இவ்வளவு காலதாமதம்?”

‘‘அதிகாரமில்லாத ஒரு பணியில் இருப்பதைவிட வெளியில் வந்து நிறைய எழுதவேண்டும்; ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும்; ஏற்கெனவே பல நல்ல விஷயங்கள் செய்துகொண்டிருக்கும் என் இளைஞர்களை உடனிருந்து உற்சாகப்படுத்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். தேர்தல் அரசியல் என்பது காஸ்ட்லியான விஷயமாகிவிட்டது. நேர்மையையும் எளிமையையும் வைத்துக்கொண்டு அரசியல் மாற்றத்தை உருவாக்குவது எளிதல்ல என்ற எதார்த்தம் எனக்குப் புரியும். அரசியலில் இறங்கவேண்டும் என்று இளைஞர்கள் என்னை வலியுறுத்தியபோதெல்லாம் ‘மக்களிடம் சென்று வேலை செய்யுங்கள். சமூக மாற்றத்தை உருவாக்குங்கள். நேரடி அரசியல் நமக்கு வேண்டாம்’ என்றே சொல்லிவந்தேன். ஆனால், நான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த நேரத்தில், ‘உச்ச நட்சத்திரத்தோடு சேர்ந்து தேர்தலில் நிற்கப்போகிறார்’, ‘டெல்லியின் வழிகாட்டுதலில் அரசியலில் இறங்கப்போகிறார்’ என்றெல்லாம் செய்திகள் கசியவிடப்பட்டன. இந்த யூகங்களுக்கு முடிவு கட்டவேண்டும்; என் இளைஞர்களும் சோர்வடைந்துவிடக்கூடாது. அதற்காகவே அரசியலில் இறங்க முடிவெடுத்தேன். எல்லா வற்றையும் தீர்மானித்து அறிவிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது.’’

“வெறும் 20 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் மாற்றத்தை உருவாக்கிவிடமுடியும் என்று நம்புகிறீர்களா?”

‘‘எண்ணிக்கை முக்கியமில்லை; எண்ணங்கள்தான் முக்கியம். இது குறுகிய கால அவகாசம். கட்டமைப்போ, நிதி வசதியோ இல்லாத சூழல். பரபரப்பை உருவாக்குவதற்காக 234 தொகுதிகளிலும் நின்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை என்றால் கொள்கைக்கும் இயக்கத்துக்கும் பின்னடைவு ஏற்படும். அதனால் பெருநகர்ப் பகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு, கூடுதல் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்தோம். இந்த 20 பேர் வெற்றிபெற்றால் நேர்மை மிகுந்த, மக்கள் எளிதில் அணுகக்கூடிய, அர்ப்பணிப்புள்ள முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். சிறு எண்ணிக்கையாக இருந்தாலும் அவர்களால் மாற்றத்தை உருவாக்கமுடியும் என்று நம்புகிறேன். நான் ஒற்றை மனிதனாக எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் கொள்கையில் உறுதியாக நின்று ஒரு தாக்கத்தை உருவாக்கியதைப்போல என் இளைஞர்களும் தாக்கத்தை உருவாக்குவார்கள்.’’

“உங்கள் கூட்டணி சார்பில் கொளத்தூரில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். எடப்பாடியில் நிறுத்தப்படவில்லை. ‘சகாயத்தை யாரோ பின்னிருந்து இயக்குகிறார்கள்’ என்கிறார்களே?”

‘‘நான் எவர் சொல்வதையும் கேட்டு இயங்கும் ஆள் இல்லை. என் மனசாட்சிக்கு எது நியாயமாகப் படுகிறதோ, அதைச் செய்யத் தயங்கமாட்டேன். கொளத்தூரில் வேட்பாளர் நிறுத்தியது தமிழ்நாடு இளைஞர் கட்சியின் முடிவு. அதுகுறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. எங்கள் இளைஞர்கள் எங்கெல்லாம் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்தார்களோ அங்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். இப்போது இப்படியொரு விமர்சனம் வந்தவுடன், எடப்பாடியிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது.’’

“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் துணையில்லாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்ய முடியாது!”
 

“நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?”

‘‘நான் ஒரு தொகுதிக்குள் முடங்கினால், களமிறங்கியுள்ள எங்கள் இளைஞர்களுக்கு வலுச்சேர்க்க முடியாமல் போய்விடும். நாங்கள் இன்னும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியை உருவாக்கவில்லை. தனி இயக்கம் கட்டித் தயாரான பிறகு எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம். நானும் தேர்தலில் போட்டியிடுவேன்.’’

“உங்களைப் போன்றவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நிறைய இளைஞர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வெழுத வருகிறார்கள். நீங்கள் அந்தப் பணியிலிருந்து விலகித் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். இதன்மூலம் அந்த இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல வருவதென்ன?”

‘‘நிச்சயம் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியால் அதிகாரத்தை நேர்மையோடும் மனசாட்சியோடும் மக்கள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தமுடியும். நானும் விரும்பித்தான் ஐ.ஏ.எஸ் ஆனேன். நேர்மையாக இருந்தேன். சமூக விரோதிகள், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தவர்கள், ஊழல்வாதிகள்மீதெல்லாம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தேன். ஒருகட்டத்தில், அதிகாரமில்லாத ஒரு பணியில் நெடுங்காலம் வைக்கப்பட்டேன். அதனால்தான் ‘இனிமேல் இந்த அமைப்பில் நீடிப்பது சரியல்ல’ என்று முடிவெடுத்தேன். ஐ.ஏ.எஸ் அலுவலர்களில் நிகரற்ற நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். அதேநேரம், ஊழல் செய்யக்கூடிய அலுவலர்களும் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் துணையில்லாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்ய முடியாது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அஞ்சாமல் நேர்மையோடு பணியாற்றினால் எந்த அரசியல்வாதியும் சொத்துகளைச் சேர்க்கமுடியாது. ஆனால், ஊழலுக்குத் துணைபோகும் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடுதலாகிக்கொண்டே போகிறது. எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையில் நேர்மையான இளைஞர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக வந்தால், தவறு செய்யும் அதிகாரிகள் அஞ்சுவார்கள். அதனால் நிறைய பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக வரவேண்டும் என்பதே என் ஆவல்.’’

“சகாயம் அரசியல் பேரவை எந்தக் கொள்கையை முன்வைத்து அரசியல் களத்துக்கு வந்திருக்கிறது?”

‘‘ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதற்காகப் பணிக்காலத்தில் நான் போராடியிருக்கிறேன். நானும் நீங்களும் செலுத்துகிற வரி இங்கு சரியாகப் பயன்படுத்தப் படுகிறதா என்று பார்க்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. அதில் முறைகேடு நடந்தால் தட்டிக்கேட்கும் உரிமை உங்களுக்கும் உண்டு; எனக்கும் உண்டு. அந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவோம். ஊழல் ஒழிப்பு, சமூகநீதிக்கு ஆதரவளிப்பது, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை பெருநிறுவனங்கள் சூறையாடுவதைக் கண்டிப்பது, மாநில உரிமைகளை மீட்டெடுப்பது, இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்குமான உரிமைகளைப் பாதுகாப்பது, இந்தித் திணிப்பை எதிர்ப்பது, மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்து நாட்டைப் பிளவுபடுத்துவதைக் கண்டிப்பது, சாதியாதிக்கம் - ஆணாதிக்கம் உள்ளிட்ட எல்லா ஆதிக்கங்களையும் எதிர்ப்பது எனத் தெளிவான கொள்கைகளை வகுத்திருக்கிறோம்.’’

“இலவசத் திட்டங்கள், பணபலம், பல தலைமுறைகளாக அரசியல் செய்யும் வேட்பாளர்கள்... இந்தக் கட்டமைப்புக்குள் சகாயத்தின் இளைஞர்கள் வெல்வது சாத்தியமா?”

‘‘இங்கே இருக்கும் கட்சிகள் எந்த அளவுக்கு ஊழலில் திளைத்தவை என்று எல்லோருக்கும் தெரியும். நான் என் நேர்மையை நிரூபித்திருக்கிறேன். நிர்வாக அமைப்பில் ஊழலுக்கு எதிரான களப்போராட்டத்தை உண்மையாகவே நடத்தியிருக்கிறேன். மிரட்டல் களைக் கடந்து இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். எனவே என்னால் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகத்தைத் தரமுடியும். என் வழிகாட்டுதலில் எங்கள் இளைஞர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அதைச் சொல்லி வாக்குக் கேட்போம். எளிமையும் நேர்மையும் எங்கள் அடையாளம். கொள்கையும் கோட்பாடும் எங்கள் ஆயுதம். பணபலம், ஆள்பலம் அனைத்தையும் மீறி இன்றைய இளைஞர்களைச் சென்றடையமுடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள்.’’

“வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது பெருமிதமான தருணமாக எதைக் கருதுகிறீர்கள்?”

‘‘எளிய மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக என் அதிகாரத்தைப் பயன்படுத்திய ஒவ்வொரு தருணமும் எனக்குப் பெருமிதம் தருவதாகவே இருந்தது. மதுரை ஆட்சியராக இருந்து தேர்தலை நடத்தியது, கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தது, நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக மாற்றியதோடு, 80 ஆண்டு கால வரலாற்றில் இல்லாதவகையில் நெசவாளிகளுக்கு போனஸ் அளித்ததென்று சில தருணங்கள் முக்கியமானவை. சேலையின் விலையைக் குறிப்பிடும் பகுதியில் நெசவாளியின் புகைப்படத்தைப் போட்டு, ‘இந்த நெசவாளி இந்தச் சேலையை நெசவுசெய்ய 19,000 முறை உடலை அசைத்திருக்கிறார்’ என்று அச்சிட்டு கௌரவம் செய்தோம். இதெல்லாம் என்றென்றும் மகிழ்ச்சியளிக்கக்கூடியவை.’’

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!