• Friday, 19 April 2024
தமிழக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்

தமிழக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்கள் வெற்றி பெற்றது. 125 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை பதவி ஏற்கவுள்ள மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற உள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் சிலருக்கு முதல் முறையாக அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அவர்களின் பட்டியலை பார்ப்போம்.

1. அன்பில் மகேஷ் பொய்யாமொழி : திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர். முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் மகன். வெற்றி பெற்றால் நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு பள்ளி கல்வித் துறையை ஒதுக்கியிருக்கிறார்கள்.

2சக்கரபாணி : ஓட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருபவர். தலைமை கொறடாவாக இருந்த சக்கரபாணிக்கு முதல் முறையாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவருக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

3. மனோ தங்கராஜ் : பத்மநாபபுரம் தொகுதியில் தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்ற மனோ தங்கராஜூக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது.

4. பழனிவேல் தியாகராஜன் : ஸ்டாலின் அழைத்ததின் பேரில் அரசியலுக்கு வந்த பழனிவேல் தியாகராஜன், சென்ற முறை போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வென்றவர். இந்த முறை மீண்டும் அதே மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்றவருக்கு மிகவும் முக்கியமான கடும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய துறையான நிதித்துறை வழங்கப்பட்டிருக்கிறது.

5. ஆர். காந்தி : ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆர். காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராகிறார். நான்கு முறை ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

6. கயல்விழி செல்வராஜ் : தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7. சி.வி கணேசன் : திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி கணேசன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8. சிவ.வீ.மெய்யநாதன் : ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அம்மைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

9. மதிவேந்தன் : ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மதிவேந்தனுக்கு அமைச்சரவையில் சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

10. எஸ்.எஸ் சிவசங்கர் : குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எஸ் சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11. பி.மூர்த்தி : மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.மூர்த்தி வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12. சா.மு நாசர் : ஆவடி தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க அம்மைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனை தோற்கடித்து வெற்றி பெற்ற சா.மு நாசர், பால் வளத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

13. செஞ்சி மஸ்தான் : செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஸ்தான், அந்தப் பகுதியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தாலும் தற்போது தான் முதல் முறையாக அம்மைச்சராகிறார். அவருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

14. சேகர் பாபு : துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேகர் பாபு அ.தி.மு.க சார்பில் இதற்கு முன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனபோதும் அம்மைச்சராக இருந்ததில்லை. தற்போதுதான் முதல் முறையாக அமைச்சராகிறார் . அவருக்கு இந்து சமயங்கள் மற்றும் அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

15. மா.சுப்ரமணியன் : சென்னையின் முன்னாள் மேயராக பலராலும் அறியப்பட்ட மா.சுப்ரமணியன் முதல் முறையாக அமைச்சராகிறார். இன்றைய சூழலில் மிக முக்கியமான துறையாக இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நள் வாழ்வுத் துறையின் அம்மைச்சராக பொறுப்பேற்கிறார்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!