• Wednesday, 24 April 2024
தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயம் ஏன்?

தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயம் ஏன்?

இனி தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதல்கட்டமாக 256 மாவட்டங்களில் இது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய முடியும்.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அறிவிப்பை 2019-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் கொடுக்கச் சொல்லி தங்க நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 1-ம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்தது. அதன் பிறகு ஜூன் 15-ம் தேதி என மேலும் கால அவகாசத்தை நீட்டித்தது. கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், நேற்று முதல் ஹால்மார்க் முத்திரை குறித்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.

தங்க நகைகளில் ஹால்மார் கட்டாயமாக்கப்படுவது குறித்து, மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள ஶ்ரீதர் சாரதியிடம் பேசினோம். ``கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்தியத் தர நிர்ணயக் கழகத்தின் (BIS) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை உறுதிசெய்யலாம்.

இந்த முத்திரையைக் கட்டாயமாக்குவதற்கான விதிமுறைகளுக்கு மத்திய அரசு 2000-ம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. ஆனாலும், அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான நகைகள் ஹால்மார்க் முத்திரைகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிக்குப் பிறகு 14 காரட் (தங்கத்தின் தரம் 58.5%), 18 காரட் (தங்கத்தின் தரம் 75%) மற்றும் 22 காரட் (தங்கத்தின் தரம் 91.6%) ஆகிய மூன்று தரங்களில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்படும். விற்கப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் தயாரிக்கப்படும் கலைப்பொருள்களில் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டாய ஹால்மார்க்கிங் மூலம், குறைந்த தரத்திலான தங்க விற்பனையை நிறுத்துவதோடு, நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும். இந்த விதிமுறை, குறைந்த தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களைக்கூட ஏமாறாமல் பாதுகாக்கும்.

தற்போதைய நிலையில், 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்களில் சுமார் 34,647 நகைக்கடைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இனி வரும் நாட்களில் தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட கலைப்பொருள்கள் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்கப்பட்டால், அந்த நகைக் கடை உரிமையாளருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. ஆண்டுக்கு 800 டன் அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யும் தங்கம் பெரும்பாலும் நகை உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அதனால் இனி தங்க நகை மற்றும் தங்கம் சார்ந்த பொருட்களை வாங்குபவர்கள் பி.ஐ.எஸ் ஹால்மார்க் தர முத்திரை, கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்" என்றார் தெளிவாக.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!