• Thursday, 16 May 2024
சுடுகாடாகிறதா சொர்க்கபூமி : லட்ச தீவில் நடப்பது என்ன?

சுடுகாடாகிறதா சொர்க்கபூமி : லட்ச தீவில் நடப்பது என்ன?

வெண்மையான மணற்பரப்புடன் கூடிய கடற்கரை, அமைதியான அலைகள், தென்னை மரங்கள் சுற்றி அழகிய கடல், சுத்தமான காற்று என இயற்கை குடிகொண்டு தன்னை அழகுபடுத்தியிருக்கும் ஒரு இடம் தான் லட்சத்தீவு. இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு கேரளக் கரைக்கு 200 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது. இந்த தீவின் மக்கள் தொகை 65,000 பேர். 96 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். மொத்த பரப்பு 32 சதுர கி.மீ.

மீன்பிடித் தொழில்தான் இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம். சுற்றுலா தளம் என்பதால் அதன் மூலமும் மக்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். கொரோனா பரவலுக்குப் பிறகு மிகவும் நேர்த்தியான வழிமுறைகள் இங்கு பின்பற்றப்பட்டது. 2021, ஜனவரி மாதம் வரை இந்தத் தீவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் தற்போது?! பல பிரச்னைகள் இங்கு கிளம்பி இருக்கிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ் தினேஷ்வர் ஷர்மா (Dineshwar Sharma) செயல்பட்டு வந்தார். எதிர்பாராதவிதமாக இவர் டிசம்பர், 4 காலமானதையடுத்து, இந்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் (Praful Khoda Patel) என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது.

இதற்கு முன்புவரை லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்-கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக பிரஃபுல் கோடா படேல் கொண்டு வந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் மக்களை பெரிதும் கவலையடையச் செய்திருக்கிறது. அப்படி என்ன செய்தார்?!

தொடக்கத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தினார் பிரஃபுல் பட்டேல். பின், கொரோனா பரிசோதனையின் போது, நெகட்டிவ் என்று வந்தால், 48 மணிநேரத்திற்குள் லட்சத்தீவிற்குள் மக்கள் நுழையலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஜனவரி வரை கொரோனா இல்லாத தீவாக இருந்த இங்கு தற்போது 5000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 என்.சி.ஆர்.பி(NCRB) அறிக்கையின் படி இங்கு கொலை, குழந்தை கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படவில்லை. ஆனால், தற்போது குண்டாஸ் சட்டத்தை இங்கு அமல்படுத்தியிருக்கிறார்.

 யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவில் மட்டும் மதுபானங்களுக்கு தடை நிலவி வந்தது. ஆனால், தற்போது, சுற்றுலாவை மையப்படுத்தி மதுபான விற்பனையை தொடங்க முடிவெடுத்திருக்கிறது இங்குள்ள அரசு. சமீபத்தில் செவிலியர்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போது கூட, பிரச்னையை கேட்காமல் அவர்களை கைது செய்ய உத்தரவிட்டது.

முஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறி தடை என்ற அறிவிப்பு அங்குள்ள முஸ்லிம்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மேலும், பள்ளிகளிலும் அசைவ உணவிற்கு தடை விதித்தது.

* அரசு நிறுவனங்கள், விவசாயம், கல்வி நிறுவனங்களில் சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி நீக்கியுள்ளது. தங்களுக்கு சாதகமானவர்களை மட்டும் பொறுப்பில் வைத்துக் கொண்டுள்ளது.

இப்படியான பல பிரச்னைகள் லட்சத்தீவில் தொடர்வதையடுத்து, அங்குள்ள மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசும், நரேந்திர மோடியும் செயல்படுகிறார்கள் என்ற குரல்கள் வலுக்கத்தொடங்கியிருக்கின்றன.

கேரளா மக்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் தற்போது, லட்சத்தீவு காப்பாற்றப் பட வேண்டும், பிரஃபுல் கே. படேல் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். முக்கியமாக நடிகர் பிரத்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ''நான் 6-ம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியிலிருந்து லட்சத்தீவிற்கு சுற்றுலா சென்றோம். பின், 'அனார்கலி' படத்திற்காக அங்கு சென்றுள்ளேன். இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருக்கிறேன். நண்பர்களும், நிறைய நினைவுகளும் அங்கு கிடைத்தது. என்னுடைய முதல் இயக்கத்தில் வந்த 'லூசிஃபர்' படத்தின் போதும் அங்கு சென்றேன். இவைகள் எல்லாம் அங்குள்ள இனிமையான மக்கள் இல்லையென்றால் நடந்திருக்காது.

சமீபகாலமாக, அங்குள்ள மக்கள் லட்சத்தீவில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து என்னிடம் கூறி வருகின்றனர். இங்கு நடக்கும் பிரச்னைகளை பொதுவெளியில் வெளிப்படுத்துங்கள் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், நான் இதைப்பற்றி எந்தக் கட்டுரையும் எழுதப் போவதில்லை. அங்கு நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் ஆன்லைனில் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாற்றங்கள் நிச்சயம் அங்குள்ள மக்களுக்கு ஏற்றதல்ல என நம்புகிறேன்.

நம், அரச கட்டமைப்பு மீது நம்பிக்கையிருக்கிறது. அதேப் போல மக்கள் மீதும் நம்பிக்கையிருக்கிறது. அங்குள்ள மக்கள் புது அதிகாரியினால் மகிழ்ச்சியாக இல்லை. எல்லாவற்றையும் விட செயல் தான் சிறந்தது என்று கருதுகிறேன். ஆகவே, அங்குள்ள பிரச்னையைப் பற்றி அந்த மக்களிடம் அரசு கேட்க வேண்டும். இந்த உலகில் லட்சத்தீவு ஒரு நல்ல இடம். நல்ல மனிதர்களும் அங்கு வாழ்கின்றனர்'' என்று பதிவிட்டுள்ளார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!