• Tuesday, 26 September 2023
கோவை தொகுதியில் நிற்பது ஏன்?  கமல் பேட்டி

கோவை தொகுதியில் நிற்பது ஏன்? கமல் பேட்டி

அரசியலிலும் பரபரப்பாக இருக்கிறார் கமல். நடிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவரும் கமலை தேர்தல் களத்தில் சந்தித்துப் பேசியபோது...

``அரசியலுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வேட்பாளராகவும் களமிறங்கிவிட்டீர்கள். இந்தப் பயணம் எப்படியிருக்கிறது?’’

‘‘மக்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்தப் பயணம் உதவியது. எங்கள் கட்சிக்கு இது இரண்டாவது தேர்தல். நான் போட்டியிடும் முதல் தேர்தல். நானே ஒரு வேட்பாளராக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பிறந்த பயன் என்பதுபோல, எதற்காக வந்தேனோ அதற்கான பயன். மக்களுக்கான சேவையை அரசியல் அதிகாரத்தின் மூலம் சிறப்பாகச் செய்யலாம் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அதற்கான முதல் அடி இது.’’

``நீங்கள் போட்டியிட கோவைத் தெற்குத் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? ஆழ்வார் பேட்டைதானே உங்கள் அடையாளம்?’’

‘‘234 தொகுதிகளும் என் தொகுதிகள்தான். மயிலாப்பூர் - ஆழ்வார்பேட்டை என் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அதையே காரணமாகச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. எனக்கு இங்கே உறவு இருக்கிறது என்பது மறைக்கமுடியாத உண்மை. ஆனால், அதை ஊன்றுகோலாகப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.

இன்னொன்று, கோவையைப் பொறுத்தவரை ‘கொங்கு மண்டலம் அவர்கள் கோட்டை’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது கொள்ளையர்களின் கோட்டை அல்லது ஊழலின் கோட்டையாக ஆகிவிடக்கூடாது. தவிர மத நல்லிணக்கத்தைச் சிதைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் அங்கே நடந்துகொண்டி ருக்கின்றன. அங்கே தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக நின்று மத நல்லிணக்கத்திற்கு நல்லடையாளமான கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கவேண்டும் என்பதும் காரணம்.’’

``2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில்தான் உங்கள் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அதனால்தான் அங்கே போட்டியிடுகிறீர்களா?’’

‘‘கண்டிப்பாக. அது ஒரு செய்தி. அது ஒரு பலம். ஆனால், எங்கள் பலம் கூடிக்கொண்டே வருகிறது என்பதுதான் ஊடகங்களின் தீர்ப்பும், மக்கள் சொல்லும் செய்தியும்.’’

``சரத்குமார் உங்களுக்கு பிரசார பலமா?’’

‘‘இன்னொரு மனிதன் எனக்காகப் பேசுவதே எனக்குக் கூடுதல் பலம்தான்.’’

``சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியோடு கூட்டணி அமைக்கக் காரணம் என்ன?’’

‘‘காரணம், விரும்பி வந்து கேட்டவர்கள். நாங்கள் யாரையும் தேடிப் போக வேண்டியதில்லை. விரும்பி வந்தவர்களுக்கு நேசக்கரம் நீட்டுவது நல்ல பண்பாகவும் இருந்தது. தவிர, தென் மாவட்டங்களில் தனக்குச் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் நம்புகிறார்.’’

``தி.மு.க-தான் வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாக ஆரம்பித்தி ருக்கின்றனவே?’’

‘‘அது கருத்து... அவரவர்களுக்கு உள்ள உரிமை. கணிப்பு சரியாகவும் இருக்கலாம். பிசகவும் செய்யலாம். கணிதத்தைப் பொறுத்தது அது. கணிப்பின்படியே எல்லாம் நடந்ததாக இல்லை. நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரியாவேன் என்பதுதான் என் தந்தையின் கணிப்பு. ‘சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி இருக்குற இடத்துல இந்தச் செத்தை எல்லாம் தேறுமா’ என்கிற கணிப்பு ஊடகத்தில் இருந்தே வந்திருக்கிறது. ‘அவங்க எல்லாம் இருக்கும்போது நீங்க எந்த தைரியத்துல ஹீரோன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க. உங்களுக்கு வெட்கமா இல்லையா?’ என்று ஒரு பத்திரிகையாளர் நேரடியாக என்னிடமே கேட்டிருக்கிறார். பிறகு அவரே என் படத்தில் பிட் ரோலிலும் நடித்திருக்கிறார். இதிலெல்லாம் கணிப்பு, ஹாஸ்யம். இதையெல்லாம் நம்பி எதுவும் செய்யமுடியாது. கருத்துக்கணிப்புகள் சாதகமாக இருக்கும்போது அது ஊக்கமாக இருக்கும். சாதகமாக இல்லாதபோது அதைக் களைந்துவிட்டு நாம் புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.’’

``ஸ்டாலின் மீது உங்களுக்குத் தனிப்பட்ட கோபம் இருக்கிறதா?’’

‘‘அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. சொல்லப்போனால் நாங்கள் நன்றாகப் பேசிக்கொள்வோம். அவர் அப்பா காலத்தில் இருந்தே எனக்கு அவரைத் தெரியும். இரண்டு பேரும் சமகால சகஜீவிகள் என்கிற அந்த மரியாதை உண்டு. அவர் மகன் என்னை வைத்துப் படமே எடுத்திருக்கிறார். ஆனால், நட்பு வேறு, அரசியல் சித்தாந்தம் வேறு. அதில் நான் மாறுபட்டே நிற்கிறேன்.’’

‘` `கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின்’ என வாழ்த்திய நீங்கள், ஒரே வார இடைவெளியில் ‘கலைஞரை அவமானப்படுத்தணும்னா மு.க.ஸ்டாலின்னு சொன்னாலே போதுமானது’ என்று சொல்கிறீர்கள். இது இருவேறு நிலைப்பாடாக இருக்கிறதே?’’

‘‘ஒன்று அரசியல் விமர்சனம். இன்னொன்று பிறந்த நாள் வாழ்த்து. பிறந்த நாள் அன்று யாரும் ‘நாசமா போ’ என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், விமர்சனத்தில் என்ன வேண்டு மானாலும் சொல்லலாம்.’’

``அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று நினைக்கிறீர்களா?’’

‘‘அப்படி நினைப்பது நான் மட்டும் அல்ல... நான் தனி மரம் அல்ல!’’

``கருணாநிதியுடன் அதிக நெருக்கமாகக் காணப்பட்டவர் நீங்கள். ஆனால் சமீபகாலமாக எம்.ஜி.ஆரை அதிகம் புகழ்கிறீர்களே?’’

‘‘நான் நெருக்கமாகப் பல பேரோடு இருந்திருக்கிறேன். ஆர்.சி.சக்தி எனும் ஒருவரோடு நெருக்கமாக இருந்திருக்கிறேன். சினிமா, திரைக்கதை என்று வரும்போது அவரைப் பற்றிப் பேசுவேன். அரசியல் என்று வரும்போது எனக்குப் பிடித்தவர்கள், எனக்கு நெருங்கியவர்கள் யார் என்பதைத் தேர்ந்தேன் நான். அந்தத் தேர்வில் எனக்குப் பிடித்த நபர் எம்.ஜி.ஆர் என ஏன் பயன்படுத்துகிறேன் என்றால், அதுதான் முக்கிய ஆரம்ப ஆதாரப்புள்ளி. ஒரு தலைவனாவதற்கு ஒரு நல்ல மனிதனாக இருக்கவேண்டும். அந்தச் சாயல்கள் எனக்கு எம்.ஜி.ஆரிடம் தெரிந்ததில் வியப்பே இல்லை.’’

`` ‘சக்கர நாற்காலி’ எனப் பொதுமேடையில் தன்னை மீறிப் பேசுவது, ஸ்டாலின்மீது தனிமனிதத் தாக்குதல், ‘தமிழ் போய்க் கத்துக்கோங்க’ எனச் செய்தியாளர் சந்திப்பில் கோபம்... பொது இடங்களில் பக்குவம் இழக்கிறாரா கமல்?’’

‘‘சக்கர நாற்காலி தானே வராது. ஒன்று, உட்கார்ந்திருக்கிறவர் உருட்டணும்; அல்லது பின்னாடி தள்ளுபவர் உருட்டணும். அது தானே வராது. அது என்னுடைய வாழ்க்கையைப் பற்றி நான் சொன்னது. ஆனால், அதைத் தவறாக மாற்றிச் சொன்னபோது கோபம் வந்தது. என் நவரசங்களில் கோபம் இல்லையென்று நான் சொல்லமாட்டேன். கண்டிப்பாக உண்டு. அதுதான் எனக்கு ஊக்கி. நான் அரசியலுக்கு வருவதற்கு ரெளத்திரம் பழகியதுதான் காரணம். அந்த ரெளத்திரம் இருக்கத்தான் செய்யும். அது என்னை விட்டு அகலக்கூடாது என்பதுதான் என் ஆசையும். இப்போது ‘தமிழ் கத்துக்கோங்க’ என்று மொத்தத் தமிழ் நாட்டையும் பார்த்துச் சொல்லி விடலாம். இதில் கோபமே கிடையாது. ஆதங்கம்தான் அது. ‘நான் சொன்ன நையாண்டியில் புரியாமல்போவதற்கு என்ன இருக்கிறது. அதுகூடப் புரியவில்லை என்றால் தமிழ் கத்துக்கோங்க’ என்றுதான் சொன்னேன். கோபம் இல்லை. அதில் கிண்டல்தான் இருந்தது. அதுவும் ஒரு நையாண்டிதான்.’’

``சீமானின் அரசியல், அவருடைய கொள்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அது அவருடைய அரசியல். அது ஒரு பாணி; என்னுடையது ஒரு பாணி. நாங்கள் இப்போது இந்த இரு கட்சிகளையும் சாடுவது கொள்கையினால் மட்டுமல்ல. முன்பு நல்ல கொள்கைகளுடன் வந்ததால்தான் அவர்கள் காலத்தின் கட்டாயமாக இருந்தார்கள். அவர்கள் அகலவேண்டியதும் இப்போது காலத்தின் கட்டாயம்தான். சீமான் அவர்களின் கொள்கைகளில் நல்லதும் இருக்கிறது. ஆனால், இந்த இரு கட்சிகள்மீது எனக்கு இருக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் அவர்மீது இல்லை. அவர் சத்தமாகப் பேசுகிறார், கம்மியாகப் பேசுகிறார், என்னைத் திட்டுகிறார் என்பதெல்லாம் பிரச்னையே கிடையாது.’’

``பிரசாரச் செலவு முதல் வாக்குக்குப் பணம் கொடுப்பது வரை, தேர்தல் அரசியலில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘குற்றம் என்று பார்க்கிறேன். ‘21-ம் நூற்றாண்டில் கொலை, கொள்ளை எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதுதான் வாழ்க்கை’ என்று சொன்னால் ஒப்புக் கொள்ளமாட்டேன். ‘ஜனத்தொகை கூடும்போது சிறுமிகளின் மீது பாலியல் பலாத்காரம் நடக்கத்தான் செய்யும். பெண்களின் ஜனத்தொகை குறைந்துவிட்டது. அதனால், தேவைக்கேற்ப ஆண்கள் செய்துகொள்கிறார்கள்’ என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். அதுபோல பணம்தான் அரசியலில் பிரதானமாக இருக்கிறது என்பதே நாம் அடிநாதம், ஸ்ருதி பிசகிவிட்டோம் என்பதற்கான அடையாளம்தான்.’’

``தி.மு.க., அ.தி.மு.க ஊழல் கட்சிகள் என்கிறீர்கள். காங்கிரஸ் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆனால், அவர்களை உங்கள் கூட்டணிக்கு அழைத்தீர்களே?’’

‘‘ஊழல் என்று சொல்லப்படும் தலைமுறைகள் இப்போது அங்கேயில்லை. இளம் தலைமுறை வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையில் சொன்னது அது. அந்த நம்பிக்கைதான் அடிநாதம். இன்னொன்று, காங்கிரஸ் சாதிப்பிரிவினை செய்யாத கட்சி. அதனால் அதைப் பிடிக்கும். கம்யூனிஸ்ட்களையும் எனக்குப் பிடிக்கும். ஆனால், தற்காலிக மாக அவர்கள் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் எனக்குப் பிடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.’’

``புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களையெல்லாம் வேட்பாளராக அறிவிப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாதா?’’

‘‘நான் பெற்ற இன்பம் அவர்களும் பெறவேண்டும். நானே புதிதாக வந்த அரசியல்வாதிதானே. எனக்கு நான் கொடுத்த முக்கியத்துவத்தை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.’’

`` ‘இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும்’ என்று முதன்முதலில் நீங்கள்தான் ஒரு திட்டத்தை அறிவித்தீர்கள். இப்போது தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி 1,000 ரூபாய், 1,500 ரூபாய் என அறிவித்திருக்கிறார்களே?’’

‘‘நீங்களும் அதை எடுத்துச் சொன்னதற்குப் பாராட்டுகள். நான் கேட்பதெல்லாம் நியாயத்தைச் சொல்லுங்கள் என்பதுதான். முதலில் ‘உங்கள் திட்டங்களை எல்லாம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் கேட்டபோது, ‘இல்லைங்க... காப்பியடிப்பாங்க’ என்று சொன்னேன். ‘இது என்ன புதுவிதமாக இருக்கிறதே’ என்று அப்போது கிண்டல் அடித்த ஊடகங்களும் உண்டு. நான் சொன்னது உண்மை என்பதை நிரூபித்துக்கொண்டிருக் கிறார்கள்.’’

``தமிழக அரசு கடன் சுமையில் தவிக்கிறது. இது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. அப்படியிருக்கும்போது ‘உழைப்பூதியம் தருகிறோம்’ என்று நீங்களும் சொல்வது, வாக்குகளை வாங்குவதற்கான வெறும் கவர்ச்சி அறிவிப்புதானே?’’

‘‘அதை என்னைப் பார்த்துச் சொல்லாதீர்கள். கஜானா காலியானதற்கு அவர்கள் கை வைத்ததுதான் காரணம் என்கிறேன் நான். நாங்கள் அதைச் செய்யப்போவதில்லை. கஜானா நிரம்ப நிரம்ப அதை வழித்து எடுத்தவர்கள் அவர்கள். நாங்கள் அந்த ஊற்று பெருகு வதற்கான ஏற்பாடு களையெல்லாம் செய்துவிட்டு இந்தச் செலவுகளைச் செய்வோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாக இருந்ததை, இவர்கள் ஆட்சிக் காலத்தில் 5 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்தி விட்டார்கள். நல்ல திட்டங்களுக்காக அவர்கள் வாங்கிய கடனாக இது எனக்குத் தெரியவில்லை. தங்களுடைய சுய மேம்பாட்டுக்காகச் செய்த செலவாகவே நான் பார்க்கிறேன். அந்தச் செலவு இல்லாமல் போய்விட்டால், இரண்டு தமிழகங்களை வளமாக வைத்திருக்க முடியும்.’’

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!