• Wednesday, 20 August 2025
கோவையில் மக்கள் ஆதரவு இல்லாத யோகி ஆதித்யநாத் கூட்டம்

கோவையில் மக்கள் ஆதரவு இல்லாத யோகி ஆதித்யநாத் கூட்டம்

தேர்தல் பரப்புரைக்காக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்திருந்தார். இதற்காகத் தனி விமானம் மூலம் லக்னோவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த யோகி, புலியகுளம் பகுதியில் பா.ஜ.க இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கிவைக்க வந்தார். அப்போது, புலியகுளம் விநாயகர் கோயிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து பேரணியைத் தொடங்கிவைத்து யோகியும் வானதியும் அங்கிருந்து ராஜவீதி வரை செல்ல ஒரு வாகனத்தைப் பிரத்யேகமாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், யோகி ஆதித்யநாத் அந்த வாகனத்தில் ஏற மறுத்துவிட்டார்.

`வாகனத்தில் ஏறி கை மட்டுமாவது அசையுங்கள்” என வானதி கேட்டுக்கொண்டார். சற்று யோசித்துவிட்டு யோகி வாகனத்தில் ஏறி கையசைத்துவிட்டு, காரில் ஏறி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றுவிட்டார். ஆனால், யோகி மேடை ஏறியபோது அங்கு பெரிய அளவுக்குக் கூட்டம் சேரவில்லை.

வெயிலும் கடுமையாக வாட்டிக்கொண்டிருந்ததால் அங்கிருந்த சிலரும் நிழலில்தான் நின்றுகொண்டிருந்தனர். இதனால் மேடையில் இருந்தவர்கள், ``நிறைய இடம் காலியா இருக்கு. தயவு செஞ்சு முன்னாடி வந்து உட்க்காருங்க. வெயிலையெல்லாம் பார்க்காதீங்க. அப்புறம் நாம ஜெயிக்கவே முடியாது” என்று கெஞ்சாத குறையாகக் கூறினர்.

சிறிது நேரம் கழித்து பேரணியில் இருந்தவர்கள் வந்த பிறகுதான் ஓரளவுக்குக் கூட்டம் கூடியது. அதிலும் வட இந்தியர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. மேடை ஏறிய பிறகு, வானதி சீனிவாசன், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். மேடையின் முன் பகுதியிலிருந்த ஆர்ச்சில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

 
 

Comment / Reply From