• Monday, 18 August 2025
கோவாவை குறிவைக்கும் மம்தா

கோவாவை குறிவைக்கும் மம்தா

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. அடுத்தாண்டு கோவா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
 
காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கோவாவில் காலூன்ற முயற்சி செய்கிறது. அரசியல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
 
இன்று கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
நான் மதச்சார்பின்மையை நம்புகிறேன். நான் ஒற்றுமையை நம்புகிறேன். இந்தியா நமது தாய்நாடு என்று நான் நம்புகிறேன். பெங்கால் என்னுடைய தாயகம் என்றால், கோவாவும் என்னுடைய தாயகம்தான்.
 
மேற்கு வங்காளம் மிகவும் வலுவான மாநிலம். எதிர்காலத்தில் கோவா மாநிலத்தையும் வலுவானதாக பார்க்க விரும்புகிறோம். கோவாவின் புதிய விடியலை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். சிலர் மம்தா ஜி, மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். அவரால் கோவா மாநிலத்திற்காக எப்படி செயல்பட முடியும்? என கேள்வி எழுப்புகிறார்கள். ஏன் முடியாது?. நான் இந்தியன். என்னால் எங்கும் செல்ல முடியும். நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்.
 
நான் உங்கள் சகோதரி மாதிரிதான். உங்களுடைய அதிகாரத்தை பறிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. மக்கள் பிரச்சனையை சந்திக்கும்போது நம்மால் உதவ முடிந்தால்... இதுதான் எனது மனதை தொட்டது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்வீர்கள், செயல்பாட்டில் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்’’ என்றார்.
 
 

Comment / Reply From