• Thursday, 02 May 2024
கிரிக்கெட் பெண்புலி மிதாலி

கிரிக்கெட் பெண்புலி மிதாலி

 

21-ம் நூற்றாண்டில் பிறந்த வீராங்கனைகள் இன்று கிரிக்கெட் உலகை ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு மத்தியில், 20-ம் நூற்றாண்டிலேயே தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய மிதாலி இன்னும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை உடைத்துக்கொண்டும், படைத்துக்கொண்டும் இருக்கிறார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர், ஏழாயிரம் ரன்களைக் கடந்த முதல் பெண் வீரர், அதிக 50+ ஸ்கோர்கள் அடித்தவர் எனப் பல சாதனைகளை வைத்திருக்கிறார் மிதாலி, சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது சர்வதேச அரங்கில் 10,000 ரன்கள் கடந்த முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறார்.

இதோடு இவரின் சாதனைகள் முடிந்துவிடப்போவதில்லை. அவை மகளிர் கிரிக்கெட்டோடு மட்டும் சுருங்கிப் போகப்போவதுமில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக காலம் விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற சச்சினின் சாதனையை, இன்னும் மூன்று மாதங்களில் உடைத்துவிடுவார் இந்த கில்லி லேடி!

ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் சாதனைகளைப் படைத்துக்கொண்டே இருந்ததுபோல்தான் மிதாலியும். அதனால், இந்த உலகம் அவரை லேடி சச்சின் என்று கொண்டாடத் தொடங்கிவிட்டது. ஆனால், மிதாலி ராஜ் எனும் பெயர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை, இந்த சாதனைகள் கொண்டோ நம்பர்கள் கொண்டோ அளவிட முடியாது.

மகளிர் கிரிக்கெட் இன்னமுமேகூட சம்பிரதாயமாகத்தான் சில இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு ஐ.பி.எல் நடத்த அத்தனை திட்டங்கள் தீட்டிய பி.சி.சி.ஐ, வழக்கம்போல் மூன்று அணிகளை வைத்து கடனே என்று வுமன்ஸ் டி-20 சேலஞ்சை நடத்தியது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம்தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடப்போகிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

இப்படி கிரிக்கெட் போர்டுகளே கண்டுகொள்ளாமல் இருந்த ஒரு விளையாட்டு இன்று நம் நாட்டில் பரவலாகக் கவனிக்கப்படுகிறது என்றால், மெல்பர்னில் நடந்த ஒரு மகளிர் உலகக் கோப்பை ஃபைனலைப் பார்க்க சுமார் 60,000 இந்தியர்கள் கூடுகிறார்கள் என்றால், அதற்குப் பின் இருப்பது மிதாலியின் போராட்டம்.

இன்று ஸ்மிரிதி மந்தனாக்கள் இருப்பதால், இந்தத் தலைமுறை மகளிர் கிரிக்கெட் பற்றிப் பேசுகிறது. அந்த ஸ்மிரிதி மந்தனாக்கள் கிரிக்கெட் அரங்கத்துக்குள் வருவதற்குக் காரணம், தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் பெண்கள் கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்ததால்தான். சாதனையாளர்களை மட்டும் தேடிக்கொண்டிருந்த மீடியாக்களின் கண்களுக்கு இந்த விளையாட்டு தென்பட்டது இந்தப் பெண்ணால்தான்.

கவாஸ்கராலும் கபில்தேவாலும் கவனம் பெற்ற ஆண்கள் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு சச்சின் எடுத்துச் சென்றார் என்றால், கவாஸ்கரும் கபில்தேவும் செய்ததை மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒற்றை ஆளாகச் செய்தவர் மிதாலி. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் அஸ்திவாரத்தைத் தன் பேட்டால் ஆழமாகப் பதித்தவர் இவர்.

பிரபலமடைந்த பின்னும்கூட ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகரான மரியாதை கொடுக்கப்ப டவேண்டும் என்று போராடினார் அவர். “உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்” என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட, “ஒரு ஆண் வீரரிடம் போய் அவருக்குப் பிடித்த பெண் கிரிக்கெட்டர் யார் என்று கேட்பீர்களா?” என்று கடிந்துகொண்டார்.

அப்படிப்பட்ட ஒருவரை லேடி சச்சின் என்று கூப்பிடுவதும் தவறுதானே. சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் வீட்டிலிருந்து கிரிக்கெட் விளையாட வந்தது அவர் மகன் தானே ஒழிய, அவர் மகள் இல்லை. இந்தியாவில் இதுதான் கிரிக்கெட். ஒற்றைப் பாலினத்துக்கான விளையாட்டாகவே இன்னும் பல இடங்களில் கருதப்படுகிறது இந்த விளையாட்டு. அதற்கு மத்தியில் அதற்கு இந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்த மிதாலி, நம்பர்களால் அளவிடப்படக்கூடியவரா என்ன?


 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!