• Thursday, 02 May 2024
ஐபேக் கருத்துக்கணிப்பு : ஸ்டாலின் உற்சாகம்

ஐபேக் கருத்துக்கணிப்பு : ஸ்டாலின் உற்சாகம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. கொரானா அச்சம் காரணமாக வாக்குப்பதிவில் மந்தநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலைப்போலவே 70 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. நகர்ப்புறங்களைவிட கிராமங்களில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்தபோது எந்தக் கட்சிக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன என்கிற கணிப்புகளும் சத்தமில்லாமல் நடந்துவந்தன.

அந்த ரிப்போர்ட் நேற்று மாலையே ஸ்டாலின் வசம் ஐபேக் கொடுத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக ஐபேக் நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட்டில் 180 தொகுதிகள் வரை தி.மு.க கூட்டணி வெற்றிபெறும் என்று சொல்லியிருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு ஐபேக் நிறுவனத்தின் கணிப்பில் முன்பு கணித்ததைவிட அதிக தொகுதிகளை உறுதியாக தி.மு.க கூட்டணி வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த ரிப்போர்ட் ஸ்டாலின் கைக்குக் கிடைத்த பிறகு அவர் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறார். தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் இந்த விவரங்களையும் ஸ்டாலின் தரப்பு பகிர்ந்திருக்கிறது.

அதேநேரத்தில் அ.தி.மு.க தரப்பில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் அந்தக் கட்சிக்கு ஓரளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு பல மூத்த அமைச்சர்களே தோல்வியைத் தழுவ வாய்ப்பிருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் போட்டியிடும் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்றும், அ.தி.மு.க மட்டும் இருபது முதல் முப்பது தொகுதிகள் வரை உறுதியாக வெல்லும் என்கிற கருத்துகள் முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அ.தி.மு.க தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது. அதேநேரம் தி.மு.க தரப்பில் ஆட்சியைப் பிடித்தவுடன், யாரெல்லாம் அமைச்சர்கள் என்பது வரை திட்டங்களைத் தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று மதியம் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஐபேக் தலைமை அலுவலகத்துக்கு ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். அங்கு தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதேபோல் சேலம் எடப்பாடியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சென்னையிலுள்ள அ.தி.மு.க-வின் வியூக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு தி.மு.க., எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறும் என்கிற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது.

மேலும், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேற்று இரவே ஸ்டாலினைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்களாம். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு முக்கியத் துறைகளில் பணி வழங்க வேண்டும் என்று சில அதிகாரிகள் இப்போதே காய்நகர்த்தவும் ஆரம்பித்துவிட்டார்களாம்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!