• Sunday, 17 August 2025
இன்னும் 25 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடுமாம் எவரெஸ்ட்

இன்னும் 25 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடுமாம் எவரெஸ்ட்

உருவாக 2,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறை வெறும் 25 ஆண்டுகளில் மிக வேகமாக உருகி வருகிறது என்ற செய்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கூடவே பனிப்பாறை இவ்வளவு வேகமாக உருகி வருவதற்கான காரணமாக, மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

உலகின் மிக உயரமான சிகரமான எவேரெஸ்ட் சிகரத்தில் உள்ள சவுத் கோல் (South Col) என்ற பனிப்பாறையானது, மிக வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகளால் கண்டறிப்பட்டுள்ளது. 1950களில் இருந்து இந்த பனிப்பாறை உருகி வந்தாலும் கடந்த 1990க்கு பின்தான் மிக வேகமாக உருகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மைனே பல்கலைக்கழகக் குழு, கடந்த 2019-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, அங்கு உருகி வரும் பனிப்பாறையில் 32 அடி நீள மாதிரிகளை சேகரித்து வந்தது.

கூடவே, அங்கு மனிதர்கள் இன்றி செயல்படக்கூடிய இரண்டு ஆராய்ச்சிக் கருவிகளை அவர்கள் அமைத்துச் சென்றனர். அதில், மனிதர்களால் தூண்டப்படும் காலநிலை மாற்றத்தால்தான் இந்த பனிப்பாறை உருகுகிறது என்பதற்கான ஆதாரங்கள் பதிவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 25 வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 150 அடி பனிப்பாறைகள் உருகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மைனே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குழு தலைவர், மற்றும் காலநிலை மாற்ற தலைவருமான பால் மேயெவ்ஸ்கி கூறுகையில், ``இந்த சவுத் கோல் பனிப்பாறையானது உருவாவதற்கு ஆன காலத்தைவிட மிக வேகமாக உருகி வருகிறது.

அதாவது, உருவானதை விட 80 மடங்கு அதிகமாக உருகுகிறது. எப்படி துருவ பகுதியில் போலார் கரடிகளைக் கொண்டு, ஆர்டிக் துருவம் வெப்பமாகி கடல் பனி உருகுவதை உணர்ந்தார்களோ, அதுபோலான இதுவும் ஓர் எச்சரிக்கை மணி ஆய்வு முடிவாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

``இப்படி அதிக வேகத்தில் உருகும் பனியால் பனிப்பாறையின் நீரினை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கூடவே இனிவரும் காலங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் பயணம் செய்வது சிறிது சவாலாகவே இருக்கும்" என்றும் குறிப்பிடுகிறார் பால் மேயென்ஸ்கி.

 

Comment / Reply From