• Wednesday, 20 August 2025
ஆவி பிடிக்க அரை டஜன் யோசனைகள்

ஆவி பிடிக்க அரை டஜன் யோசனைகள்

வேப்பிலை பொடி ஒரு டீஸ்பூன், ஓமம் ஒரு டீஸ்பூன், கல் உப்பு ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், துளசி இலை ஒரு கைப்பிடி, வெற்றிலை மூன்று (கிள்ளிப்போட்டது)... ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து மேலே சொன்னவற்றை எல்லாம் போட்டு இரண்டு நிமிடங்கள் ஆவி பிடித்தால் சளித்தொல்லை நீங்கும்.

என்ன பொருள்கள் சேர்த்து ஆவி பிடிப்பது என்று அறியாதவர்கள், வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது நலம். இரண்டு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, நொச்சி இலை, தும்பை இலை, எட்டு மிளகு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் இவற்றை சேர்த்து, ஒரு நிமிடம் ஆவி பிடிக்கலாம்.

மூக்கு ஒழுகுதல், சளித்தொந்தரவு, அதனால் உடல் அசதி போன்றவற்றுக்கு, தண்ணீரில் கைப்பிடி நொச்சி இலை, மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

ஆவி பிடித்தவுடன் வியர்வையை நன்கு துடைத்துவிட்டு இயற்கை காற்று 10 நிமி டங்கள் நம்மீது படும்படி இருக்க வேண்டும். உடனே ஏ.சி அறைக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

ஆவி பிடித்தலில் தவறாமல் இடம்பெற வேண்டியவை மஞ்சள்தூள், கல் உப்பு ஓமவல்லி. இம்மூன்றையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால்... ஜலதோஷத்துக்கு நம்மை பிடிக்காது!

தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது கற்பூரம் சேர்த்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். யூக்கலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தால் நாசித் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

பொதுவாக ஆவி பிடிக்கும்போது காற்றை வாய் வழியாக உள்ளிழுத்து, மூக்கு வழியாக வெளியே விடவும். இது சுவாசக் குழாய் சுத்திகரிப்பு முறை.  மஞ்சள்தூள், வெற்றிலை (ஃப்ரெஷ்/காய்ந்தது), கிராம்பு இவை மூன்றும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைபாரம், மூக்கடைப்பு சரியாகும். 

இடித்த விரலி மஞ்சள் இரண்டுடன் நொச்சி இலை கைப்பிடி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

சளியுடன் கொரோனாவுக்கான மற்ற அறி குறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Comment / Reply From