• Saturday, 27 April 2024
ஆரம்பமே கோளாறு.. தகறாறு : மங்கும் ம.நீ.ம.

ஆரம்பமே கோளாறு.. தகறாறு : மங்கும் ம.நீ.ம.

தேர்தல் முடிந்த பின்பு ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு மாதிரி பிரச்னையென்றால், மக்கள் நீதி மய்யம் கட்சியை, தொடர்ந்து செயல்படுத்துவதிலேயே பிரச்னையாகியிருக்கிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். துணைத் தலைவராக இருந்த டாக்டர்.மகேந்திரன் பதவியை ராஜினாமா செய்ததுடன்,

``தலைவர் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வது போல தெரியவில்லை. கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்பு, அவர் ம.நீ.மவை சீரமைக்க வேண்டும்” என்று சொல்லி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்,``களையெடுக்கப்பட வேண்டிய துரோகிகள் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்தது இவரது சாதனை.

தோல்வியை அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சி செய்கிறார். தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியல்லை. இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான்” என்று கூறியிருந்தார்.

என்னதான் நடக்கிறது? என்று மக்கள் நீதி மய்யம் வட்டாரங்களில் விசாரித்தபோது, ``கட்சி ஆரம்பித்து சில மாதங்களுக்கு பிறகுதான் டாக்டர் மகேந்திரன் கட்சிக்குள் வந்து சேர்ந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர், ம.நீம சார்பில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1.50 லட்சம் வாக்குகள் வாங்கினார். அதன்பிறகு கட்சிக்குள் அவர் கை ஓங்க ஆரம்பித்தது. கமலுக்கு அடுத்து நான்தான் என்ற மனநிலை அவருக்கு வந்துவிட்டது.

தேர்தல் வியூகத்துக்காக முதலில் ஐ-பேக்கிடம் பேசி, பிறகு சங்க்யா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை டிக் அடித்தனர். விஜய் டி.வி மகேந்திரன் மற்றும் சுரேஷ் ஐயர்தான் அதன் தூண்கள்.

MNM என்றாலே மகேந்திரன் அண்ட் மகேந்திரன் என்று எங்கள் கட்சிக்குள்ளேயே விமர்சிக்கும் அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையே அதிகார போட்டி உச்சத்தை அடைந்தது. சங்க்யா சொல்யூஷன்ஸ் டீமை தாண்டி கமலை யாரும் நெருங்க முடியாது என்பது 100 சதவிகிதம் உண்மை. அதேபோல, டாக்டர் மகேந்திரனும் தான் சொல்வதுதான் சரி, அதைதான் அனைவரும் கேட்க வேண்டும் என்று தனியாக ஆட்சி செய்து வந்தார்.

அவரைக் கடந்து யாரும் எதுவும் செய்ய முடியாது. இரண்டு மகேந்திரன்களுக்குள்ளும் அதிகாரப் போட்டி உச்சத்தில் இருந்தபோது, சந்தோஷ் பாபு, பொன்ராஜ் உள்ளிட்டோரின் வருகையும் டாக்டர்.மகேந்திரனுக்கு அப்செட்டை கொடுத்தது.

பொன்ராஜுக்கு துணை தலைவர் பதவியை கொடுத்தவுடன், கமல் அனைத்து இடங்களிலும் அவரை முன்னிலைப்படுத்துவதால் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக மகேந்திரன் கவலைப்பட்டார். மேலும், மகேந்திரன் இந்தத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்திருந்தார். பிரசாரத்தையும் தொடங்கிய நிலையில், அதற்கு செக் வைக்கும் விதமாக சங்க்யா சொல்யூஷன்ஸ் கமல்ஹாசனுக்கு கோவை தெற்கு தொகுதியை தேர்ந்தெடுத்தனர்.

இதனால், கடைசி நேரத்தில் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். தனக்கென தனியாக வியூக அமைப்பாளர்களையும் பணியமர்த்தினார். கமலுக்கு மக்களிடம் ஆதரவு இருந்தும், களப்பணிகளில் நாங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தோம். துணை தலைவர் என்கிற அடிப்படையில் டாக்டர் மகேந்திரன் சற்று தெற்கு தொகுதியில் உதவி செய்திருந்தால் நாங்கள் இன்னும் சற்று கூடுதலான வாக்குகளை பெற்றிருப்போம்.

அதேபோல, சங்க்யா சொல்யூசன்ஸின் வியூகங்களும் மோசமாகவே இருந்தது. ஆனால், இந்த இரண்டு தரப்பினரையும் கடந்து கமலிடம் இதை சொல்ல முடியவில்லை. தலைமைக்கும் எங்களுக்குமான இடைவெளியை இவர்கள் இன்னும் அதிகரித்தனர். டாக்டர் மகேந்திரன் தொடர்ந்து சங்க்யாவின் வியூகங்களை எதிர்த்ததால், அவர் ஓ.பி.எஸ் பினாமி, பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் என்றெல்லாம் புகார் கூறினர்.

அதனால்தான், தனது அறிக்கையில் டாக்டர் மகேந்திரன், முன்னாள் டி.வி மீடியாவைச் சேர்ந்த மகேந்திரன் என குறிப்பிட்டு அவர் மீது பல இடங்களில் குற்றம்சாட்டியுள்ளார். புகார் எதுவாக இருந்தாலும் கட்சி விசாரணை நடத்தி சரி செய்திருக்கலாம். இல்லையென்றால் பிரச்னை வெடித்துக் கொண்டிருக்கும்போதே கமல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

பொதுவெளிக்கு வந்தப் பிறகு துரோகி, கோழை என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை. நடப்பதை எல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மற்ற கட்சிகளிலும் இது இயல்புதான் என்றாலும், மாற்று சக்தியை முன்னிறுத்தும் ம.நீ.மவில் ஆரம்ப கட்டத்திலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள் வருவது எங்களைப் போல சாமானிய தொண்டர்களுக்கு உடன்பாடில்லை.

முதலில் இங்கு தலைமைக்கும், தொண்டர்களுக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கட்சியை கலைத்துவிட்டு தலைவர் சினிமாவிலேயே கவனம் செலுத்தலாம். இதேநிலையில், கட்சியில் தொடரும் மனநிலையில் பலர் இல்லை என்பதே நிதர்சனம்” என்றனர் வேதனையுடன்.

 
 
 
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!