• Friday, 26 April 2024
அடுத்த மூன்று நாட்கள் ஆட்டம் காட்டப்போகும் வானம்

அடுத்த மூன்று நாட்கள் ஆட்டம் காட்டப்போகும் வானம்

தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை  கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் கணிசமான அளவுக்கு மழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களில் சற்று மழை குறைந்தாலும் டெல்டா மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகரித்தபடி உள்ளது.

கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 347.62 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 44 சதவீதம் அதிகமாகும். 12 மாவட்டங்களில் அதிகமான மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது.
 
இதனால் சென்னையில் அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மிதக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளும் நிரம்பி உள்ளன. இந்த 5 ஏரிகளில் இருந்தும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுவும் சென்னையில் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்துள்ளது.

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருப்பதால் முக்கிய சாலைகளிலும் தெருக்களிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் மக்களை மீட்கவும், முகாம்களில் தங்க வைக்கவும், உணவு, மருந்து வழங்கவும் விரிவான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்துள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை இலாகா தெரிவித்து இருந்தது. அதன்படி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தெற்கு அந்தமான் வரை கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மிகத்தீவிரமாக இருப்பதாக இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தெரியவந்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமான ஒன்றாக இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்தம் மிக விரைவாக காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறி இருந்தது.

அதற்கு ஏற்ப புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மிக வேகமாக வலுப்பெற்று வருகிறது. அந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர உள்ளது. நாளை (புதன்கிழமை) அது தமிழக கடலோரம் நோக்கி நகரத் தொடங்கும்.

குறைந்த காற்றழுத்தம் வலுவடையும்போது கடலில் அதிக சூறாவளி காற்றையும், கடல் சீற்றத்தையும் உண்டாக்கும். மேலும் மிக அதிக மழையையும் கொண்டு வரும். நாளை முழுவதும் அந்த காற்றழுத்தம் வலுவாகிக் கொண்டே தமிழக கடலோரம் நோக்கி வரும்.

காற்றழுத்தம் மேலும் வலுவடையும் பட்சத்தில் அது புயலாக மாறும். அந்த புயலுக்கு புதிய பெயர் சூட்டப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும்.

டெல்டா மற்றும் வட பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் காற்றும், மழையும் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு அந்த 10 மாவட்டங்களுக்கும் ரெட்அலர்ட் விடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முழுவதும் பலத்த மழை கொடுக்கும் அந்த குறைந்த காற்றழுத்தம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை வடதமிழக கடலோரத்தை நெருங்கும். இதன் காரணமாக வட கடலோர பகுதிகளில் மிக பலத்த மழை முதல் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

12-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் கணிசமான அளவுக்கு மழை இருக்கும். இதன் காரணமாக 10, 11, 12 ஆகிய 3 நாட்களும் அதிக கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடலில் சூறாவளி காற்றும், கொந்தளிப்பும் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!