• Thursday, 02 May 2024
ஸ்புட்னிக் இருக்க பயமேன்... தொடங்கியது இந்திய உற்பத்தி

ஸ்புட்னிக் இருக்க பயமேன்... தொடங்கியது இந்திய உற்பத்தி

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவது மருந்தாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இந்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சப்ளை செய்யப்படுகிறது. 
 
அதேசமயம் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியாவின் பனேசியா பயோடெக் என்ற மருந்து உற்பத்தி நிறுவனம், ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி மருந்து உற்பத்தி இன்று தொடங்கியது. இத்தகவல், ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் பனேசியா பயோடெக் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் வெளியாகி உள்ளது.
 
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி நடைபெறுகிறது. முதல் தொகுப்பு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மருந்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக மாஸ்கோவில் உள்ள கமலேயா மையத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழு அளவிலான தடுப்பூசி மருந்து உற்பத்தி, கோடை காலத்தில் தொடங்கும் என்றும், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்திற்கு ஏற்ப மருந்துகள் தயாரிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்-வி மருந்து தயாரிக்க உள்ளது.
 
இதேபோல் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!