• Monday, 06 May 2024
மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : புதுக்கோட்டையில் போராட்டம்

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : புதுக்கோட்டையில் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த 2017-ல் ஹைட்ரோ கார்பன் எடுப்ப இருப்பதாக மத்திய அரசு அறிவித்தபோது, நெடுவாசல் பகுதியில் பெரும் போராட்டம் மூண்டது. ஏற்கெனவே ஓ.என்.ஜி.சியால் ஆழமான ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டன. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்கட்டம், இரண்டாவது கட்டம் என கிட்டத்தட்ட 200 நாட்கள் வரையிலும் போராட்டம் நீடித்தது. நெடுவாசல், வடகாடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி என சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் உள்ள சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் போராட்டக் களத்தில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த நிலையில்தான், மக்களின் தொடர் போராட்டங்களால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. இதற்கிடையே , விவசாயிகள், பொதுமக்களின் தொடர் கோரிக்கையால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகக் கடந்த 2019ல் தமிழக அரசு அறிவித்தது.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

இதனால், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகரத் திட்டங்கள் வராது என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் இருந்தனர். இதற்கிடையே தான், தற்போது மத்திய அரசு இந்தியா முழுவதும் 75 புதிய எரிவாயு கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெய் ஷேல் கேஸ் எடுக்க ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காக்குறிச்சி வட தெரு என்ற இடத்தையும் இணைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கருக்காக்குறிச்சி வட தெரு பகுதி, கோட்டைக்காடு பகுதி விவசாயிகள் எங்கள் பகுதியில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம், இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறி ஓ.என்.ஜி.சி மூலம் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியபோது,

" ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு துவங்கிவிடும் என்பதற்காகத் தான், எங்கள் பகுதியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். 2109ல் எங்கள் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. பெருமூச்சு விட்ட நாங்கள் இதுபோன்ற திட்டங்கள் எல்லாம் கொண்டு வர மாட்டார்கள் என்று தைரியமாக இருந்தோம். ஆனால், மத்திய அரசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த மறைமுக முயற்சியை மேற்கொள்கிறது.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

ஓ.என்.ஜி.சி அமைத்த ஆழ்துளை எண்ணைக் கிணறுகளை 1 வருடத்திற்குள் முழுவதுமாக அப்புறப்படுத்தி விடுவதாக 2017ல் அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் கணேஷ் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்திருந்தார். 3ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணைக் கிணறுகளிலிருந்து எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர்விட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால், எங்கள் விளை நிலங்கள் எல்லாம் பாழாகும். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எங்கள் உயிர் போனால்தான் இங்கு எரிவாயு எடுக்க முடியும். திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தால், மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். இதில், மாநில அரசு தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்" என்கின்றனர்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!