• Tuesday, 19 August 2025
ஜி7  உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி-7 அமைப்பின் மாநாடு இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது (நேற்றும் - இன்றும்). இந்த ஜி-7 உச்சி மாநாட்டில் வழக்கமாக உலக அளவில் நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து அலசி ஆராயப்பட்டு, அதற்கான தீர்வு காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜி-7 உச்சி மாநாட்டில் 'பில்டு பேக் பெட்டர்' (Build Back Better) என்ற தலைப்பின் கீழ் பேரிடரிலிருந்து மீண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டெழுவது குறித்தும், கொரோனாவுக்கு பிந்தைய உலகைக் கட்டமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது.

இந்த ஜி-7 மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா, ஆஸ்திரேலியா, கொரியா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்களுக்குச் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். அந்த வகையில் இந்தியா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பிரதமர் மோடி, கொரோனா இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலகளாவிய ஒற்றுமை, தலைமைத்துவம், ஆதரவு ஆகியவை அதிகமாகத் தேவைப்படுவதாகவும் மாநாட்டில் அவர் பேசியதாக மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

பிரதமரின் ஜி-7 மாநாடு பேச்சு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவுக்கு உதவிய ஜி-7 நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

  • தடுப்பூசி உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தடுப்பூசிக்கான மூலப்பொருள் விநியோகச் சங்கிலி, எந்தவிதத் தடையுமின்றி தொடர வேண்டும்.

  • இந்த தருணத்தில் உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

  • 'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்' (One Earth; One Health) என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாகச் செயல்பட்டு உலக சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

  • இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக அரசு, தொழிற்துறையினர், பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகமும் போராடிக்கொண்டிருக்கிறது. இது போன்ற பெருந்தொற்றுகள் வருங்காலத்தில் ஏற்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை.

  • கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அறிவுசார் காப்புரிமை தொடர்பான (Trade-Related Aspects of Intellectual Property Rights) ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பிடம் கோரிக்கை.

மோடி

மாநாட்டில், பிரதமர் மோடியின் 'ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்', (One Earth One Health) திட்டத்துக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மாநாட்டில் ஆதரவு தெரிவித்தார். அதேபோல், காப்புரிமை தொடர்பான மோடியின் (TRIPS) ஒப்பந்தக் கோரிக்கைக்கு ஆஸ்திரேலியா தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.

மேலும், `இந்தியா போன்ற தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளுக்குத் தடுப்பூசி மூலப்பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியும்’ என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மாநாட்டில் கூட்டமைப்பு நாடுகளை வலியுறுத்தினார்.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் இன்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார்.

 

Comment / Reply From