• Friday, 19 April 2024
சிங்கம் சிங்கிளாதான் வரும் : புதிய கட்சி தொடங்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை

சிங்கம் சிங்கிளாதான் வரும் : புதிய கட்சி தொடங்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை

ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். ஜெகன்மோகன் ரெட்டியின் பிரசார வியூகங்கள், தந்தை ராஜசேகரின் செல்வாக்கு ஆகியவை நடந்து முடிந்த 2019 ஆந்திர சட்டசபைத் தேர்தலில் அவருக்குப் பலமாகக் கைகொடுத்ததால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிவிட்டு அரியணை ஏறினார். ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் தனிக்கட்சி தொடங்கிய நேரத்தில் அக்கட்சி மாநிலம் முழுவதும் சென்றடைய முக்கிய காரணமாக இருந்தவர் அவரது இளைய சகோதரி சர்மிளா.

கடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் முழுவதும் பயணித்து எளிமையாகப் பிரச்சாரம் செய்து ஷர்மிளா மக்கள் மனதில் மாற்றத்தின் விதையைத் தூவினார். குறிப்பாக, கடந்த தேர்தலில் தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து ஷர்மிளா மேற்கொண்ட மாபெரும் பாதயாத்திரை ஆந்திரத்தில் 'ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்' என்ற கட்சியை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்த்தது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் ஆந்திரப் பிரதேசம் என்ற ஒற்றைக் குடையின் கீழ் இருந்த மாநிலம், 2014-ல் ஆந்திரா - தெலங்கானா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆந்திர மாநிலத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது. அதன் காரணமாக, அக்கட்சிக்குத் தெலங்கானாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் செல்வாக்கு இல்லாமல் போனது. தன் தந்தையின் காலத்தில் தெலுங்கானாவில் அவருக்கு இருந்த செல்வாக்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு இல்லை என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்ட ஷர்மிளா, தற்போது தனது அரசியல் பயணத்தைத் தெலுங்கானாவின் பக்கம் திருப்பி இருக்கிறார்.

2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனல் பறக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்காகப் பிரசாரம் மேற்கொண்ட ஷர்மிளா அதன்பிறகு பெரியளவில் கட்சி வேலைகளிலும், அரசியல் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. ஷர்மிளாவின் இந்த விலகல் அவரது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டி மீதான அதிருப்தியின் காரணமாகத் தான் என்று ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், ஷர்மிளா கடந்த பிப்ரவரி மாதம் தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் திடீரென ஒய்.எஸ்.ஆர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஷர்மிளா , தெலங்கானா அரசியலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், களப்பணிகளின் மூலமாக மக்களைச் சந்தித்து தெலங்கானாவில் ஒய்.எஸ் .ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். ஷர்மிளாவின் இந்த பேச்சு தெலங்கானா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. தெலங்கானாவில் தற்போது சந்திரசேகர ராவின் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைப் பொறுத்தவரையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைத் தெலுங்கானாவில் விரிவுபடுத்தி அங்கு ஆட்சியைப் பிடிக்க விருப்பம் காட்டவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையில் நதிநீர் பங்கீடு பிரச்னை பல ஆண்டு காலமாக நீடித்து வருவதால் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானாவில் தனது கட்சியை விரிவுபடுத்த விரும்பவில்லை. 2019 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் வரை ஓரளவுக்கு தெலுங்கானாவிலும் கவனம் செலுத்தி வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆந்திர மாநில தேர்தலில் வெற்றி பெற்றதும் தெலுங்கானா அரசியலில் தனது ஆதிக்கத்தை முற்றிலுமாக குறைத்துக் கொண்டது.

இந்நிலையில், ஷர்மிளா தனது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்போது மறைமுகமாக விலகி இருக்கிறார். அதை வெளிப்படையாகக் கூறாமல் தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆட்சியைத் தெலங்கானாவில் அமைக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அல்லாத தனிக் கட்சி ஒன்றினை தொடங்குவதற்காக ஷர்மிளா மாநிலம் முழுவதும் பயணித்து தன் கட்சிக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்து வந்தார். இந்நிலையில், ஷர்மிளா தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான ஜூலை 8-ம் தேதி தெலங்கானாவில் புது கட்சி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஷர்மிளா
ஷர்மிளா

தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி அரசியலில் இறங்குவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஷர்மிளா கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து மாவட்ட எல்லையான கம்மம் வரை பிரமாண்ட கார் பேரணி நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்மம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் புதிய கட்சி தொடங்குவது குறித்தும் அறிவித்தார்.

 

திரளான தொண்டர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் பேசிய ஷர்மிளா, ``தெலங்கானாவில் என் அப்பா ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியைத் தர விரும்புகிறேன். அதனால், வருகிற ஜூலை 8-ம் தேதி அப்பாவின் பிறந்தநாளன்று அவரது நல்லாசியுடன் புதிய கட்சி ஒன்றினை தொடங்க இருக்கிறேன். கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்தும் அன்றைய தினமே அறிவிக்கப்படும். சிங்கம் சிங்கிளாக தான் வரும். நானும் தனியாகவே களமிறங்கியிருக்கிறேன். அரசியல் மாற்றம் தெலங்கானாவில் தற்போதைய தேவையாக இருக்கிறது என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

என் அப்பா ராஜசேகர ரெட்டியின் நல்லாசியுடன் தெலங்கானா மக்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறேன். நான் ஆரம்பிக்கவிருக்கும் கட்சி தெலங்கானாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளைக் குறிவைக்கும் அம்பாக இருக்கும் என்பதை நான் இங்கு உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் இல்லை என்று சிலர் என் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நான் வளர்ந்தது, படித்தது, திருமணம் செய்து கொண்டது எல்லாமே தெலங்கானாவில் தான். நான் இந்த மண்ணின் பெண். தெலங்கானாவை நேசிக்கிறேன். இந்த மாநிலத்தின் நலனுக்கு எதிராக ஒருபோதும் செயல்படமாட்டேன். தெலங்கானாவிற்கு வர வேண்டிய ஒரு சொட்டு நீர் கூட வேறு மாநிலத்திற்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன். உங்களை நம்பியே அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் தான் ஆதரவளிக்க வேண்டும்" என்று தனது உரையை முடித்தார்.

கூட்டத்தில் ஷர்மிளா
கூட்டத்தில் ஷர்மிளா
 

ஷர்மிளாவின் திடீர் அரசியல் பிரவேசம் பிரதான அரசியல் கட்சிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே அரசியலில் கால்பதித்திருக்கும் ஷர்மிளா தன் தந்தையின் செல்வாக்கை மீட்டெடுத்து தனது கட்சியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்துவார் என்றும், தெலங்கானாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு அடுத்தபடியாக சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் பலமாக இல்லை என்பதால் அங்குக் காலூன்ற ஷர்மிளாவின் கட்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!