• Tuesday, 16 April 2024
சபாஷ் ஜோகோவிச் ஸாரி நடால்

சபாஷ் ஜோகோவிச் ஸாரி நடால்

டென்னிஸ் விளையாட்டின் மிக அற்புதமான ஆட்டம் சில மணிநேரங்களுக்கு முன்பு பாரிஸில் நடந்துமுடிந்தது. பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டிகள் நேற்று இரவு நடந்தது. இதில் உலகின் நம்பர் வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து, களிமண் தரையின் மன்னன் நடால் விளையாடினார். 2017 தொடங்கி தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பிரெஞ்சு ஓப்பன் சாம்பியன் நடால்தான். மொத்தமாக 13 முறை பிரெஞ்ச் ஓப்பனை வென்றிருக்கிறார் நடால்.

ஆரம்பத்தில் நடாலின் கையே ஓங்கியிருந்தது. முதல் செட்டில் 5-0 என ஜோகோவிச்சை பின்னுக்குத்தள்ளி முன்னிலையில் இருந்தார் நடால். இதனால் நடாலே வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டெழுந்தார் ஜோகோவிச். கடைசிகட்டத்தில் திடீரென முதல் செட்டிலேயே 3 புள்ளிகளைப்பெற்றார் ஜோகோவிச். இருந்தாலும் ஏற்கெனவே பெற்றுவிட்ட முன்னிலை காரணமாக 6-3 என இந்த செட்டை கைப்பற்றினார் நடால்.

இரண்டாவது செட்டில் இருந்து ஜோகோவிச்சின் கையே ஓங்கியிருந்தது. அடுத்த மூன்று செட்களையும் 6-3, 7-6, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச். பிரெஞ்சு ஓப்பன் வரலாற்றில் 108 போட்டிகளில் விளையாடியிருக்கும் நடாலின் மூன்றாவது தோல்வி இது. 105 போட்டிகளில் வெற்றிபெற்று ராஜாவாக வலம்வந்த நடாலை வீழ்த்தி சாதனைப்படைத்திருக்கிறார் ஜோகோவிச். ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் இளம்வீரர் சிட்சிபாஸை எதிர்த்து விளையாட இருக்கிறார்.

‘’இரவு நேரம் போக போக மைதானத்தின் தன்மை மாறியது. பந்தின் பவுன்ஸ் குறைந்தது. அது ஜோகோவிச்சுக்கு சாதகமாக அமைந்தது. மைதானத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி விளையாடுபவரே வெற்றிபெறுவார். அந்தவகையில் ஜோகோவிச் இந்த வெற்றிக்கு முழுவதும் தகுதியானவர்.

எல்லா நேரங்களிலும் வெற்றிபெறமுடியாது. சில நேரம் வெற்றிபெறுவோம், சில நேரம் தோற்போம். என்னுடைய பெஸ்டை கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால், இன்றைய நாள் என்னுடையதாக இல்லை. இந்த ஆண்டு எனக்கு மிகவும் முக்கியமான ஒரு தொடரில் தோற்றது வருத்தமாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கை தொடர்கிறது. இது ஒரு டென்னிஸ் கோர்ட்டில் ஏற்பட்ட தோல்விதானே!’’ என்று தோல்விக்குப் பின்னர் பேசினார் நடால்.

வெற்றிபெற்ற ஜோகோவிச் ‘’நடாலை எதிர்கொள்வது ஒரு சிறப்பான அனுபவம். இன்றைய போட்டி டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டி. நடாலை வென்றதில் மகிழ்ச்சி'’ என்றார்.

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!